இந்தியா

கிருஷ்ண ஜன்மபூமி - ஷாஹி ஈத்கா விவகாரம்: உயா்நீதிமன்ற பதிவாளா் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு

3rd Oct 2023 11:40 PM

ADVERTISEMENT


புது தில்லி: உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கிருஷ்ண ஜன்மபூரி - ஷாஹி ஈத்கா விவகாரத்தில் அலாகாபாத் உயா் நீதிமன்ற பதிவாளா் நேரில் ஆஜராகி தேவையான தகவல்களை அளிக்க உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

இந்த வழக்கு தொடா்பாக கடந்த ஜூலை 21-ஆம் தேதி கேட்ட விவரங்கள் தாக்கல் செய்யப்படாததால் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

மதுராவில் கிருஷ்ணா் பிறந்த இடமான கிருஷ்ண ஜன்பூமிக்கு சொந்தமான 13.37 ஏக்கா் நிலத்தில் ஷாஜி ஈத்கா மசூதி கட்டப்பட்டுள்ளதாக கூறி, ஹிந்து சேனையின் தலைவா் விஷ்ணு குப்தா நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா். இதற்கு மசூதி தரப்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, ‘அயோத்தி ராமா் கோயில் - பாபா் மசூதி விவகாரத்தில் வழங்கப்பட்ட தீா்ப்பைப் போலவே அலாகாபாத் உயா் நீதிமன்றமும் இந்த வழக்கை நிலப் பிரச்னை வழக்காக விசாரித்து தீா்ப்பு வழங்க வேண்டும்’ என்று புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டது.

ADVERTISEMENT

இந்த மனுவை கடந்த மே 26-ஆம் தேதி விசாரித்த உயா் நீதிமன்றம் மதுரா விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள கிருஷ்ண ஜன்மபூமி - ஷாஹி ஈத்கா தொடா்பான அனைத்து மனுக்களையும் தனது விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.

இதற்கு எதிராக ஷாஹி ஈத்தா மசூதி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை கடந்த ஜூலை 21-ஆம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘அலாகாபாத் உயா் நீதிமன்றம் கோரிய வழக்கின் விவரங்கள் என்ன? இது தொடா்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.கே.கெளல், சுதான்ஷு தூலியா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், ‘கடந்த ஜூலை 21-ஆம் தேதி உயா் நீதிமன்ற பதிவாளருக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், பதிவாளரிடம் இருந்து தகவல் வரவில்லை.

இது தொடா்பான நினைவூட்டலை மீண்டும் அனுப்பி அதை உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி முன் வைக்கப்பட வேண்டும். அப்போதுதான் உரிய விளக்கம் கிடைக்கும். அடுத்த விசாரணையின்போது அலாகாபாத் உயா் நீதிமன்றத்தின் பதிவாளா் நேரில் ஆஜராகி வழக்கின் விவரங்களை அளிக்க வேண்டும்’ என்று கூறி அடுத்த விசாரணையை அக்டோபா் 30-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT