இந்தியா

விமான ஊழியர்கள் வாசனை திரவியம், மவுத்வாஷ் பயன்படுத்தத் தடை வருகிறது

3rd Oct 2023 10:56 AM

ADVERTISEMENT


புது தில்லி: மூச்சுக்காற்று பரிசோதனையின்போது ஆல்கஹால் பயன்படுத்தியிருப்பதாக வரும் முடிவுகளுக்கு முடிவுகட்ட, விமான ஊழியர்கள்  ஆல்கஹால் கலந்த வாசனை திரவியம், மவுத்வாஷ் பயன்படுத்த விரைவில்  தடைவிதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

விமானப் போக்குவரத்து இயக்குநரகம், விமான ஊழியர்கள் பணிக்கு வரும் போது ஆல்கஹால் கலந்த வாசனை திரவியம், மருந்துகள், மவுத்வாஷ் போன்றவற்றை பயன்படுத்த தடை விதிக்க பரிந்துரைத்துள்ளது. பணிக்கு வரும்போது நடக்கும் பரிசோதனையின்போது ஆல்கஹால் பயன்படுத்தியிருப்பதாக வரும் முடிவுகளுக்காக இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

விமானத்தில் ஏறுவதற்கு முன்பு மற்றும் இறங்கும் போது, விமான ஊழியர்களுக்கு நடத்தப்படும் மூச்சுக்காற்று பரிசோதனையின் போது ஆல்கஹால் பயன்படுத்தியிருப்பதாக வரும் பரிசோதனை முடிவுகளைத் தடுக்கும் நோக்கில் இந்த தடை உத்தரவு விரைவில் நடைமுறைக்கு வரவிருக்கிறது.

இதையும் படிக்க.. பிப்ரவரியில் படுக்கை வசதிகொண்ட வந்தே பாரத் ரயில்சேவை?

ADVERTISEMENT

மேலும், உடல்நலக் குறைபாடுகளுக்காக விமான ஊழியர்கள் மருந்துகளை எடுத்துக்கொள்ளும்போது, அது குறித்து நிறுவனத்தின் மருத்துவர்கள் குழுவிடம் ஆலோசிக்கும் வகையில் வழிமுறைகள் உருவாக்கப்படவிருக்கின்றன.

இது குறித்து விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அளித்திருக்கும் பரிந்துரையில், ஆல்கஹால் கலந்த எந்தவிதமான மருந்தோ, மவுத்வாஷ், பற்பசை, வாசனை திரவியங்களையோ விமான ஊழியர்கள் பயன்படுத்தக் கூடாது. வேறு எந்த மருந்துகளை, ஊழியர்கள் எடுத்துக்கொண்டிருந்தாலும், அது குறித்து நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்ட மருத்துவர்களிடம் காட்டி ஆலோசனை பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக, பணிக்கு வரும்போது நடக்கும் மூச்சுக்காற்று பரிசோதனையின்போது ஆல்கஹால் எடுத்துக்கொண்டிருப்பதாக முடிவுகள் வந்தால், விமான ஊழியர்கள், தாங்கள் ஷேவிங் லோஷன்கள், வாசனை திரவியங்களைப் பயன்படுத்தியிருப்பதாகவும், சிலர் ஹோமியோபதி மருந்துகள் எடுத்துக்கொண்டிருப்பதாகவும் விளக்கம் கொடுப்பது வழக்கம்.

முதல் முறையாக, மூச்சுக்காற்று பரிசோதனையில் தோல்வியடையும் விமான ஊழியர்கள் மூன்று மாதங்களுக்கு தங்களது ஓட்டுநர் உரிமத்தை இழப்பார்கள். இரண்டாவது முறை உறுதியாகும்போது மூன்று ஆண்டுகளுக்கு உரிமத்தை இழப்பார்கள். மூன்றாவது முறையாக உறுதியானால், அவர்களது உரிமம் ரத்து செய்யப்படும் என்பது தற்போதைய விதிமுறை.

புதிய பரிந்துரையில், விமான ஊழியர்களுக்கு பரிசோதனை நடத்தும் கருவி 0.000 என்று இருப்பதை உறுதி செய்துகொள்ளவும், தினந்தோறும் பரிசோதனை முடிவுகளை நகல் எடுத்து வைத்துக் கொள்ளவும், ஒரு முறை பரிசோதனையில் பாசிடிவ் வந்தால் 20 முதல் 25 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் பரிசோதனை நடத்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT