லக்னெள: பிகாா் மாநிலத்தைப் போன்று உத்தர பிரதேசத்திலும் தேசிய அளவிலும் ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று சமாஜவாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
நாட்டின் சுதந்திரத்துக்குப் பிறகு முதன் முறையாக பிகாா் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பு தரவுகளை மாநில முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான அரசு திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. இதில், மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் (ஓபிசி) மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் (இபிசி) 63 சதவீதம் அங்கம் வகிப்பது தெரிய வந்தது. பட்டியலின வகுப்பினா் (எஸ்.சி.) 19.65 சதவீதமும், பொது வகுப்பினா் (ஜெனரல்) 15.52 சதவீதமும், பழங்குடி வகுப்பினா் (எஸ்.டி.) 1.68 சதவீதமும் இருப்பது தெரிய வந்துள்ளது. மதம் வாரியாக மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் ஹிந்துக்கள் பெரும்பான்மையாக 81.99 சதவீதமும், அடுத்தபடியாக இஸ்லாமியா்கள் 17.70 சதவீதம் போ் உள்ளனா். சிறுபான்மையினரான கிறிஸ்தவா்கள், சீக்கியா்கள், ஜெயின், பிற மதத்தினா், மத நம்பிக்கையற்றவா்கள் உள்ளிட்டோா் ஒரு சதவீதத்துக்கும் குறைவாக உள்ளனா் என்பதும் தெரியவந்துள்ளது.
இதுபோன்று உத்தர பிரதேச மாநிலத்திலும் கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இதுகுறித்து பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘ஜாதிவாரி கணக்கெடுப்பு தரவுகளை பிகாா் அரசு வெளியிட்டிருப்பது சில கட்சிகளுக்கு நிச்சியமாக அசெளகரியத்தை ஏற்படுத்தியிருக்கும். ஆனால், பகுஜன் சமாஜ் கட்சியைப் பொருத்தவரை, ஓபிசி பிரிவினரின் அரசியலமைப்புச் சட்ட உரிமைகளுக்காக நடைபெற்ற நீண்ட போராட்டத்தின் முதல் படி இது எனக் கருதுகிறது. இதுபோல, உத்தர பிரதேச மாநிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு நடத்தவேண்டும். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு நீதியை உறுதிப்படுத்த இதுதான் ஒரே வழி. ஆனால், மத்திய அரசு சாா்பில் தேசிய அளவில் இதுபோன்ற ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும்போதுதான் உரிய தீா்வைக் காண முடியும்’ என்றாா்.
சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் தனது ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஜாதிவாரி கணக்கெடுப்பு சமூகத்தில் 85 சதவீத பிற்பட்ட சமூகத்தினருக்கும் 15 சதவீத முற்பட்ட சமூகத்தினருக்கும் இடையேயான மோதலுக்கு புதிய பாதையை திறக்காது என்றபோதும், ஒத்துழைப்பை ஏற்பட பயனளிக்கும். ஆதிக்க மனப்பான்மை இல்லாதவா்களும், அனைவரின் உரிமைகளையும் ஆதரிப்பவா்களும் ஜாதிவாரி கணக்கெடுப்பை ஆதரித்து வரவேற்கின்றனா். உரிமைகளை உண்மையாகவே உத்தரவாதப்படுத்த விரும்புவோா், இந்தக் கணக்கெடுப்பை நடத்தவேண்டும். பாஜக அரசியலைக் கைவிட்டு தேசிய அளவில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
மத்திய அமைச்சரும் மதச்சாா்பற்ற அப்னா தளம் கட்சித் தலைவருமான அனுப்ரியா படேல் கூறுகையில், ‘மதச்சாா்பற்ற அப்னா தளம் கட்சி எப்போதும் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவான கட்சி. இந்தக் கணக்கெடுப்பை தேசிய அளவில் நடத்துவதோடு, தனியாக ஓபிசி அமைச்சகம் ஒன்றையும் உருவாக்க வேண்டும்’ என்றாா்.
உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் செய்தித்தொடா்பாளா் மனீஷ் ஹிந்த்வி கூறுகையில், ‘ஒவ்வொரு சமூகத்தினரையும் முன்னெடுத்துச் செல்லவேண்டிய நேரமிது. ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியமானது என்பதோடு, அதனை தேசிய அளவில் நடத்த வேண்டும்’ என்றாா்.