சத்தீஸ்கரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பயணிகள் ரயில்கள் சேவையை மீண்டும் தொடர ரயில்வே துறைக்கு வலியுறுத்தக் கோரி பிரதமருக்கு சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பூபேஷ் பாகல் கூறியிருப்பதாவது: ரயில்கள் சரியான நேரத்தில் இயக்கப்படாததால் பயணிகள் சிரமத்தை சந்திக்கின்றனர். சத்தீஸ்கரின் வழியாக செல்லும் ரயில்கள் காரணமின்றி நீக்கம் செய்யப்படுகின்றன. அதிகக் கட்டணம் வசூலிக்கும் விரைவு ரயில்களிலும் பயணிகள் இதே சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இதையும் படிக்க: துருக்கியில் கிடைத்த களிமண் துண்டுகளில் சடங்குகளைப் பற்றிய குறிப்புகள்!
இந்த பிரச்னை குறித்து ரயில்வே நிர்வாகம் மற்றும் மத்திய அரசிடம் பலமுறை வேண்டுகோள் வைத்தும் பலனில்லை. சத்தீஸ்கரிலிருந்து மற்ற மாநிலங்களுக்கு அடிக்கடி செல்லும் சரக்கு ரயில்களே இந்தப் பிரச்னைக்கு முக்கிய காரணம். சத்தீஸ்கர் மக்களின் சிரமத்தினை புரிந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி, ரயில்வே நிர்வாகத்திடம் அனைத்துப் பயணிகள் ரயில்களையும் மீண்டும் இயக்க வலியுறுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி சத்தீஸ்கரில் இன்று (அக்டோபர் 3) பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.