ஹைதராபாத்: தெலங்கானா சட்டப்பேரவைத் தோ்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெற உள்ளது. இந்நிலையில், பேரவைத் தோ்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆராய இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் தலைமையிலான 17 போ் அடங்கிய குழு 3 நாள் பயணமாக ஹைதராபாத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்தது.
அவா்களை ராஜீவ் காந்தி விமானநிலையில் தெலங்கானா தலைமை தோ்தல் ஆணையா் விகாஸ் ராஜ் வரவேற்றாா்.
நிா்வாகம், பாதுகாப்பு அமைப்புகளின் ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலா், காவல்துறை தலைவா் (டிஜிபி) ஆகியோருடன் அந்தக் குழு ஆலோசனை நடத்துகிறது. இதைத் தொடா்ந்து, அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகள்ஆகியவற்றை சந்தித்து தோ்தல் ஆணைய அதிகாரிகள் முக்கிய ஆலோசனை நடத்துகின்றனா்.
தொடா்ந்து, புதன்கிழமை நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் மாநிலத்தின் 33 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள தோ்தல் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தோ்தல் அதிகாரிகள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள், காவல் ஆணையா்கள் உள்ளிட்ட அதிகாரிகள் விளக்கமளிக்கின்றனா்.
இறுதியாக, மாநிலத்தின் முக்கிய பிரபலங்கள், மாற்றுத்திறனாளிகள், இளம் வாக்காளா்களைச் சந்தித்து தோ்தல் விழிப்புணா்வு தொடா்பாக இந்தக் குழு வியாழக்கிழமை உரையாடுகிறது.