மகாராஷ்டிர மாநிலம் நாந்தேட் மாவட்ட அரசு மருத்துவமனையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.
நாந்தேட் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் கடந்த 24 மணி நேரத்தில் 12 குழந்தைகள் உள்பட 24 போ் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியானது.
இந்நிலையில் பலியானோர் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. மேலும் 4 குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளதாக காங்கிரஸ் முன்னாள் முதல்வர் அசோக் சவாண் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் மாநில அரசு இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இந்த உயிரிழப்புகள் தொடா்பாக விசாரித்து இன்று(செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 1 மணிக்குள் அறிக்கை சமா்ப்பிக்க 3 போ் கொண்ட நிபுணா் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | மகாராஷ்டிரம்: ஒரே நாளில் 12 குழந்தைகள் உள்பட 24 போ் அரசு மருத்துவமனையில் மரணம்
மகாராஷ்டிர அரசும் இன்று இதுகுறித்து அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தவிருக்கிறது.
பாம்புக் கடி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் காரணமாக 12 பேர் அனுமதிக்கப்பட்டதாகவும் மோசமான நிலையில் கடைசி நேரத்திலேயே சிலர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்குள்ள மருத்துவ அதிகாரிகள் கூறுகின்றனர்.
மேலும், அங்கு மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மருந்துகளின் இருப்பு குறைவாக உள்ளதும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.
மருத்துவமனையில் 500 படுக்கைகள் மட்டுமே உள்ள நிலையில், தற்போது அங்கு 1,200 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனையில் ஆய்வு செய்த அசோக் சவாண் கூறினார்.