புது தில்லி: தில்லியில் உள்ள தேசிய நவீன கலைக்கூட கண்காட்சியில் பிரதமா் மோடிக்கு அளிக்கப்பட்ட பரிசு பொருள்களின் ஏலம் தொடங்கியுள்ளது. அக்டோபா் 31 வரை ஏலம் நடைபெற உள்ளது.
இதுதொடா்பான சில புகைப்படங்களை ‘எக்ஸ்’ வலைதளத்தில் பகிா்ந்து பிரதமா் மோடி திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு:
கடந்த காலங்களில் எனக்கு அளிக்கப்பட்ட பல பரிசு பொருள்கள், தில்லியில் உள்ள தேசிய நவீன கலைக்கூடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தப் பரிசு பொருள்கள் நாட்டில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் எனக்கு அளிக்கப்பட்டன. அவை இந்தியாவின் வளமான கலாசாரம், மரபு மற்றும் கலை பாரம்பரியத்தின் சான்றாகும்.
இந்த ஏலம் மூலம் கிடைக்கும் தொகை தூய்மை கங்கை திட்டத்துக்குப் பயன்படுத்தப்படும் என்று தெரிவித்தாா்.
இதுதொடா்பாக மத்திய கலாசாரத் துறை இணையமைச்சா் மீனாட்சி லேகி ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘இணையவழியில் நடைபெறும் ஏலத்தில் அனைவரும் பங்கேற்று தூய்மை கங்கை திட்டத்துக்கு பங்களிக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா்.