ஜார்க்கண்டில் கடந்த 24 மணி நேரத்தில் கனமழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜார்க்கண்டின் சில பகுதிகளில் சனிக்கிழமை மாலையில் இருந்து இடைவிடாத மழை பெய்து வருகிறது. பல இடங்களில் கனமழை தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் ராஞ்சியின் லால்பூர் பகுதியில் உள்ள ஹத்மா சரைதாண்டில் நிரம்பி வழியும் வாய்க்காலில் விழுந்த 28 வயது இளைஞர் உயிரிழந்தார். அவரின் உடல் இன்று காலை மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
ஜம்தாரா மாவட்டத்தில், ஞாயிற்றுக்கிழமை மின்னல் தாக்கியதில் ஒரு பெண்ணும், ஒன்றரை வயது முதல் ஏழு வயது வரையிலான அவரது மூன்று குழந்தைகளும் உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
பொகாரோ மாவட்டத்தில் மண் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரு குழந்தையும், மேலும் 9 மற்றும் 12 வயதுடைய இரண்டு சிறுமிகள் பாலமு மாவட்டத்தில் உள்ள மாயாபூர் கிராமத்தில் உள்ள குளத்தில் மூழ்கி இறந்தனர்.
படிக்க: அக்டோபர் மாத பலன்கள் (மேஷம் - கன்னி)
ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த இடைவிடாத மழை காரணமாக மாநிலத்தின் பல ஆறுகளில் நீர்மட்டம் அபாய கட்டத்தை எட்டியுள்ளது.
மாநில தலைநகர் ராஞ்சியில் மழையின் தீவிரம் குறைந்தாலும், லோஹர்டகா, கும்லா மற்றும் சிம்தேகா ஆகிய பகுதிகளுக்கு இன்று கனமழை முதல் மிகக் கனமழை பெய்யும் என வானிலை துறை ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அக்டோபர் 4-ம் தேதி வரை மாநிலத்தின் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என ராஞ்சி வானிலை ஆய்வு மையத்தின் பொறுப்பாளர் அபிஷேக் ஆனந்த் கூறினார்.