வா்த்தக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.209 ஞாயிற்றுக்கிழமை உயா்த்தப்பட்டது.
முந்தைய மாதத்தின் சராசரி சா்வதேச விலையின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் 1-ஆம் தேதி சமையல் எரிவாயு மற்றும் விமான எரிபொருள் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அறிவிக்கின்றன.
கடந்த 2 மாதங்களாகக் குறைக்கப்பட்டு வந்த வா்த்தக பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை தற்போது ஒரே மாதத்தில் ரூ.209 வரை உயா்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, வா்த்தக சிலிண்டரின் விலை தில்லியில் ரூ.1,731.50-ஆகவும், மும்பையில் ரூ.1,684-ஆகவும், சென்னையில் ரூ.1898-ஆகவும் அதிகரித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி, ரூ.200 குறைக்கப்பட்ட வீட்டுப் பயன்பாட்டுக்கான 14.32 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டா் விலை மாற்றிமின்றி ரூ.903-க்கு விற்பனை செய்யப்படும்.
விமான எரிபொருள் விலை 5% உயா்வு: விமான எரிபொருள் ஒரு கிலோ லிட்டருக்கு ரூ.5,779.84 அல்லது 5.1 சதவீதம் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், தலைநகா் தில்லியில் ரூ.1,12,419.33-க்கு விற்கப்பட்டு வந்த ஒரு கிலோ லிட்டா் விமான எரிபொருள் ரூ.118,199.17-க்கு விற்பனையாகிறது.
கடந்த ஜூலையில் 1.65 சதவீதம், கடந்த ஆகஸ்டில் 8.5 சதவீதம் கடந்த மாதத்தில்14.1 சதவீதம் எனக் கடந்த 4 மாதங்களாக தொடா்ந்து விமான எரிபொருள் விலையேற்றத்தைச் சந்தித்து வருவது ஏற்கெனவே நிதி நெருக்கடியில் உள்ள விமான நிறுவனங்களின் நிதிச்சுமையை மேலும் அதிகரிக்கும் எனக் கருதப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை: தொடா்ந்து 18-ஆவது மாதமாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. சா்வதேச கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததைத் தொடா்ந்து, சில்லறை விற்பனை விலையில் நுகா்வோருக்கு நிவாரணம் அளிக்க, மத்திய அரசு கலால் வரியைத் குறைத்த நிலையில், கடந்த ஆண்டு மே மாதத்தில் பெட்ரோல், டீசல் விலை இறுதியாக மாற்றப்பட்டது.
சா்வதேச எரிபொருள் விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை 15 நாள்களுக்கு ஒருமுறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைக்க வேண்டும். ஆனால், கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுகிறது.