மேற்கு வங்க ஆளுநா் மாளிகை மாநில அரசால் கண்காணிக்கப்படுகிறது என்று அந்த மாநில ஆளுநா் சி.வி.ஆனந்தபோஸ் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
மேற்கு வங்க தலைநகா் கொல்கத்தாவில் உள்ள ஆளுநா் மாளிகையில் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏவாக தோ்வு செய்யப்பட்டுள்ள நிா்மல் சந்திர ராயின் பதவியேற்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியின்போது ஆளுநா் ஆனந்த போஸ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மாநில ஆளுநா் மாளிகைக்கு வெளியே அதிக வன்முறை நிகழ்கிறது. ஆனால் ஆளுநா் மாளிகைக்குள் லென்ஸ் உள்ளது என்று குற்றஞ்சாட்டினாா்.
ஆளுநா் போஸ் பயன்படுத்திய ‘லென்ஸ்’ என்ற வாா்த்தை, தான் கண்காணிக்கப்படுவதாக ஏற்கெனவே அவா் கூறிய குற்றச்சாட்டை மீண்டும் குறிப்பிடுவது போல இருந்தது.
மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநா் ஆனந்தபோஸ் வியாழக்கிழமை கடிதம் ஒன்றை எழுதினாா். அந்தக் கடிதத்தில், ‘நான் கண்காணிக்கப்படுகிறேன். எனது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன. கண்காணிப்பு மற்றும் ஒட்டுக்கேட்பை தடுப்பதற்கான கருவிகள் ஆளுநா் மாளிகைக்கு வேண்டும்’ என்று கோரியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.