பெங்களூரு: நாட்டின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், குறிப்பிட்ட துறையில் பணிபுரியும் தனது ஊழியர்களை அடுத்த மாதம் முதல் வாரத்திலிருந்து ஐந்து நாள்கள் அலுவலகத்திலிருந்து வேலை செய்ய கட்டாயப்படுத்தியுள்ளது.
முன்னதாக, நிறுவனம் தனது ஊழியர்களை வாரத்தில் மூன்று நாள்கள் அலுவலகத்திற்கு வருமாறு கேட்டுக் கொண்டது. இது குறித்து டிசிஎஸ் நிறுவனத்திடம் கேட்டபோது, தற்போது அமைதியான காலகட்டத்தில் இருப்பதால் கருத்து தெரிவிக்க முடியாது என்று தெரிவித்தது.
டிசிஎஸ் நிறுவனமானது 2024ஆம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டு முடிவுகளை அக்டோபர் 11 அன்று அறிவிக்கும் என தெரிவித்தது. அதே வேளையில் 2023ஆம் நிதியாண்டு ஆண்டறிக்கையில், இந்த ஆண்டில் படிப்படியாக ஊழியர்களை அலுவலகங்களுக்கு அழைத்து வருவதாக நிறுவனம் தெரிவித்திருந்தது.
வீட்டிலிருந்து வேலை செய்வது நிச்சயமாக அனைவருக்கும் மிகவும் வசதியானது. ஆனால் இதில் குறைபாடுகள் உள்ளன. ஒத்துழைப்பு, வழிகாட்டுதல் மற்றும் குழு உருவாக்கம் போன்ற பணியிட அத்தியாவசியங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் மிகவும் பாதிக்கப்பட்டது என்று தலைமை மனிதவள அதிகாரியான மிலிந்த் லக்காட் தனது வருடாந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதில் ஆண்களை விட பெண்களிடையே அதிக தேய்வு ஏற்படுவது அசாதாரணமானது என்று அவர் தெரிவித்திருந்தார்.
இருப்பினும், அலுவலகத்திற்கு ஊழியர்கள் திரும்புவது விதிமுறையாகும். ஊழியர்கள் இதில் தங்களை மறுசீரமைக்க வேண்டும் என்றார் அவர்.