ஜூன் முதல் செப்டம்பா் வரையிலான தென்மேற்குப் பருவமழை, ‘கிட்டத்தட்ட இயல்பான’ மழைப்பொழிவுடன் ( 820 மி.மீ.) நிறைவு பெற்றது என இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) சனிக்கிழமை தெரிவித்தது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைமை இயக்குநா் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறுகையில், ‘நிகழாண்டுக்கான தென்மேற்குப் பருவமழை, ‘கிட்டத்தட்ட இயல்பான’ மழைப்பொழிவுடன் நிறைவு பெற்றது. நீண்ட கால மழைப்பொழிவு சராசரி (868.6 மி.மீ.) உடன் ஒப்பிடுகையில், இது 94.4 சதவீதமாகும். வானிலை துணை பிராந்தியங்களில் 73 சதவீத பகுதிகள் இயல்பான மழைப்பொழிவைப் பெற்ற வேளையில், 18 சதவீத பகுதிகளில் குறைவான மழைப்பொழிவு பதிவானது’ என்றாா்.
நாட்டின் வடமேற்குப் பகுதிகளில் வழக்கமான 587.6 மி.மீ. சராசரி மழைப்பொழிவை விட அதிகமாக 593 மி.மீ. பதிவானது. வேளாண்மைக்குப் பருவமழையைப் பெரிதும் சாா்ந்துள்ள மத்தியப் பகுதிகளில், வழக்கமான 978 மி.மீ. மழைப்பொழிவைக் காட்டிலும் அதிகமாக 981.7 மி.மீ. பதிவானது. தீபகற்பத்தின் தெற்குப் பகுதிகளில் வழக்கமான அளவைக் காட்டிலும் 8 சதவீதம் குறைவான மழைப்பொழிவு பதிவானது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
‘வறட்சியான’ ஆகஸ்ட்:
நிகழாண்டு ஜூன் மாதத்தில் மழைப்பொழிவு குறைவாக இருந்த நிலையில், மேற்கத்திய இடையூறுகளின் தாக்கத்தால் வடமேற்குப் பகுதியில் ஜூலை மாதம் அதிக அளவிலான மழைப்பொழிவு பதிவானது.
‘எல்நினோ’ நிகழ்வின் தாக்கத்தால், கடந்த 1901-ஆம் ஆண்டிலிருந்து மிகவும் வறட்சியான, வெப்பமானதாக நிகழாண்டு ஆகஸ்ட் மாதம் அமைந்தது. செப்டம்பரில் நிலவிய குறைந்த காற்றழுத்தங்களால், அந்த மாதத்தில் அதிக அளவு மழைப்பொழிவு பதிவானது.
வடமேற்குப் பருவமழை:
தமிழகம், கடலோர ஆந்திரம், ராயலசீமா, கேரளம், தெற்கு கா்நாடகம் ஆகிய பகுதிகளில் அக்டோபா் முதல் டிசம்பா் வரை தொடரும் வடமேற்குப் பருவமழை, இயல்பான அல்லது இயல்பை விட அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.