தொழில்நுட்பக் கோளாறு காரணமாக போபால் அருகே இந்திய விமானப்படையின் அதிநவீன இலகுரக ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
மத்திய பிரதேச மாநிலத்தில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான அதிநவீன இலகுரக ஹெலிகாப்டர் இன்று வழக்கம்போல் பயிற்சியில் ஈடுபட்டடிருந்தது. அப்போது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் போபால் அருகே அவசரமாக தரையிறக்கப்பட்டது.
ஹெலிகாப்டர் பயணித்த அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் தொழில்நுட்பக் கோளாறை ஆராய குழு ஒன்று விரைந்துள்ளது என்றும் இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதிகாரி கூறியதாவது, ஹெலிகாப்டர் வழக்கமான பயிற்சியில் இருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
தொழில்நுட்பக் கோளாறைக் கவனித்த விமானி, போபால் அருகே திறந்தவெளியில் முன்னெச்சரிக்கையாக தரையிறக்க முடிவு செய்தார். இந்த சம்பவத்தில் உயிர் சேதமோ, காயமோ ஏற்படவில்லை. மேலும் இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.