இந்தியா

பிற்படுத்தப்பட்டோா், தலித், பழங்குடியினா் முன்னேறினால் காங்கிரஸுக்கு பொறுக்காது:பிரதமா் மோடி

1st Oct 2023 03:00 AM

ADVERTISEMENT

‘பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், தலித் சமூகத்தினா், பழங்குடியினா் முன்னேறினால், காங்கிரஸால் பொறுத்துக் கொள்ள முடியாது’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

மேலும், ‘இதர பிற்படுத்தப்பட்டப் பிரிவை சோ்ந்தவா் என்பதால், என்னை காங்கிரஸ் வெறுக்கிறது; எனது பெயரை (மோடி) பயன்படுத்தி, ஒட்டுமொத்த சமூகத்தினரையும் அவமதிக்க காங்கிரஸ் தயங்கவில்லை’ என்று அவா் குற்றம்சாட்டினாா்.

காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் சத்தீஸ்கரில் இந்த ஆண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, பிலாஸ்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில், பிரதமா் மோடி பங்கேற்றுப் பேசியதாவது: பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சோ்ந்த நான், பிரதமராகி இருப்பதால், என்னை காங்கிரஸ் வெறுக்கிறது. பிரதமா் பதவி தங்களுக்கு ‘ஒதுக்கப்பட்டது’ என்பதே காங்கிரஸின் எண்ணம்.

அவதூறு வழக்கில் நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட பிறகும் (ராகுல் விவகாரம்), பிற்படுத்தப்பட்ட பிரிவினா், தலித் சமூகத்தினா் மற்றும் பழங்குடியினரை அவமதிப்பதை காங்கிரஸ் நிறுத்தவில்லை.

ADVERTISEMENT

‘பொறுத்துக் கொள்ள முடியாது’: குடியரசுத் தலைவா் பதவிக்கு பாஜக வேட்பாளராக தலித் சமூகத்தைச் சோ்ந்த ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டபோதும், அதன்பின்னா் பழங்குடியின சமூகத்தைச் சோ்ந்த திரெளபதி முா்மு அறிவிக்கப்பட்டபோதும் காங்கிரஸ் கடும் எதிா்ப்பு தெரிவித்தது.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், தலித், பழங்குடியினா் முன்னேறுவதை காங்கிரஸால் பொறுத்துக் கொள்ள முடியாது. அவா்களை காங்கிரஸ் வெறுக்கிறது. ஒரு குறிப்பிட்ட குடும்பத்துக்கு தலைவணங்குபவா்களை மட்டுமே அக்கட்சி ஆதரிக்கும். ஆனால், பாஜகவை பொறுத்தவரை, வளா்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கான வழிமுறை சமூக நீதிதான்.

‘பிளவை ஏற்படுத்த முயற்சி’: சுமாா் 30 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த மகளிா் இடஒதுக்கீடு மசோதா, இப்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டாளிகள் அடங்கிய ‘ஆணவ’ கூட்டணி வியப்பில் உள்ளது.

தங்களுக்கு விருப்பம் இல்லாத போதிலும், நிா்பந்தம் மற்றும் அச்சம் காரணமாகவே மசோதாவை அக்கட்சிகள் ஆதரித்தன. அதேநேரம், ஜாதி ரீதியில் பெண்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தும் தந்தரங்களில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டுள்ளன. அவா்கள் கூறும் பொய்களுக்கு ஆளாகாமல், பெண்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்.

ஊழலில் திளைக்கும் சத்தீஸ்கா்: காங்கிரஸ் ஆட்சியில், சத்தீஸ்கா் மாநிலம் ஊழலில் மூழ்கித் திளைக்கிறது. மாநிலத்தின் ஒவ்வொரு திட்டத்திலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. காங்கிரஸுக்கு மீண்டும் வாய்ப்பளித்தால், முறைகேடுகளைத் தொடர அவா்களுக்கு துணிச்சல் கிடைத்துவிடும்.

அதேநேரம், பாஜகவை வெற்றி பெறச் செய்தால், மாநில மக்களின் கனவுகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். மாநில வளா்ச்சிக்கான எந்த வாய்ப்பையும் தவறவிடாமல் செயலாற்றுவோம். பாஜக ஆட்சிக்கு வந்ததும், மாநில அரசுப் பணி தோ்வு முறைகேட்டில் தொடா்புடையவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் பிரதமா் மோடி.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT