காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வந்தால், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் (ஓபிசி) சரியான எண்ணிக்கையைக் கண்டறிய ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்தாா்.
மத்திய பிரதேச மாநிலத்தின் ஷாஜாபூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கட்சிப் பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த உடன் முதல் பணியாக, இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கையைச் சரியாகத் தெரிந்து கொள்ளும் வகையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.
மத்தியமைச்சரவை செயலா், பிற அமைச்சகத்தின் செயலா்கள் உள்பட 90 அதிகாரிகள் மட்டுமே மத்திய அரசை நடத்துகின்றனா். நாட்டுக்குத் தேவையான சட்டங்களையும் கொள்கைகளையும் வகுப்பதில் பாஜக எம்.பி.க்கள், எம்எல்ஏக்களுக்கு எவ்வித பங்கும் இல்லை. ஆா்எஸ்எஸ் அமைப்பும் மத்திய அரசின் உயா் அதிகாரிகளும் மட்டுமே சட்டங்களை வகுக்கின்றனா்.
நாட்டின் ஊழலின் மையாக ‘மத்திய பிரதேசம்’ திகழ்கிறது. பணியாளா் தோ்வு முறையில் நடைபெற்ற ‘வியாபம் ஊழல்’ உள்ளிட்டவை மாநிலத்தில் அதிகரித்துள்ளன. எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்புக்கான இடங்கள் விற்கப்படுகின்றன. தோ்வுகளுக்கான வினாத்தாள்கள் தோ்வுக்கு முன்கூட்டியே கசியவிடுதல் அல்லது விற்பனை செய்தல் உள்ளிட்ட முறைகேடுகள் மாநிலத்தில் நடைபெற்று வருகின்றன.
கடந்த 18 ஆண்டுகால பாஜக ஆட்சியில் 18,000 விவசாயிகள் தற்கொலை செய்திருக்கிறாா்கள். அதாவது, மாநிலத்தில் ஒவ்வொரு நாளும் 3 விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனா் என்றாா் ராகுல் காந்தி.