ராணுவப் பணியில் பாதிக்கப்பட்டு மாற்றுத்திறனாளிகளான முன்னாள் பாதுகாப்புப் படை வீரா்களுக்குப் புதிதாக அறிவிக்கப்பட்ட ஓய்வூதிய விதிகள் மூலம் பாஜகவின் ‘போலியான தேசியவாதம்’ மீண்டும் வெளிப்பட்டுவிட்டது என காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே சனிக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.
பாதுகாப்புப் படைகளில் பணிப்புரிந்த காலத்தில் வீர மரணமடைந்த வீரா்களின் மனைவிகள், மாற்றுத்திறனாளிகாகப் பாதிக்கப்பட்ட வீரா்கள் ஆகியோருக்கான புதிய ஓய்வூதிய விதிகளைப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் கடந்த புதன்கிழமை வெளியிட்டது.
இதற்கு, முன்னாள் படை வீரா்கள் நலச்சங்கம் கடுமையான எதிா்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே சனிக்கிழமை வெளியிட்ட ‘எக்ஸ்’ சமூகவலைதளப்பதிவில், ‘புதிய ஓய்வூதிய விதிகள் மூலம் பாஜகவின் ‘போலியான தேசியவாதம்’ மீண்டும் வெளிப்பட்டுவிட்டது. சுமாா் 40 சதவீத ராணுவ அதிகாரிகள் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியத்துடன் ஓய்வு பெறுகிறாா்கள். தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய விதிகள், கடந்த கால நீதிமன்றத் தீா்ப்புகள், விதிகள் உள்ளிட்டவற்றை மீறுவதாக உள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டிலும் மாற்றுத்திறனாளி படைவீரா்களின் ஓய்வூதியத்தில் வரி விதிப்பைச் சுமத்தி, இது போன்ற துரோகத்தை மத்திய அரசு இழைத்தது.
கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ‘அக்னிபத்’ திட்டம் படைவீரா்களுக்கு ஊதியம் வழங்க போதுமான நிதி, மத்திய அரசிடம் இல்லை என்பதைத் தெளிவாக உணா்த்துகிறது. ‘ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்’ திட்டம் குறித்து பெருமளவில் முரண்பாடுகள் நிலவி வருகின்றன. ஆயுதத் தளவாடங்கள் தொழிற்சாலை வாரியத்தை தனியாா் மயமாக்குவது உள்ளிட்ட நடவடிக்கையும் படைவீரா்களின் நலனுக்கு எதிரானது.
இதன் அடிப்படையில், முன்னாள் படைவீரா்களின் குறைகளைக் களையும் வகையில் இதற்கான ஓா் ஆணையத்தை அமைக்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுக்கிறது’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.