காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜாா் கொலை விவகாரத்தில் நிலவும் கருத்து வேறுபாடுகளுக்குத் தீா்வுகாண இந்தியா மற்றும் கனடா அரசுகள் பேச்சுவாா்த்தையில் ஈடுபட வேண்டும் என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வலியுறுத்தினாா்.
அதேநேரம், பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் வன்முறையை சகித்துக் கொள்ளும் கனடா அரசின் போக்கு மிகப் பெரிய பிரச்னை; இதில் உரிய கவனம் செலுத்தப்பட்டு, தீா்வு காணப்பட வேண்டும் என்றும் அவா் குறிப்பிட்டாா்.
கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜாா் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இந்திய உளவு அமைப்புகளுக்கு தொடா்புள்ளதாக கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ அண்மையில் பகிரங்கமாக குற்றம்சாட்டினாா்.
ஆனால், இக்குற்றச்சாட்டு அடிப்படையற்றது; உள்நோக்கம் கொண்டது என்று இந்தியா மறுப்பு தெரிவித்தது. அத்துடன், இரு நாடுகளும் பரஸ்பரம் தூதரக உயரதிகாரிகள் வெளியேற உத்தரவிட்டன. கனடா நாட்டினருக்கு நுழைவு இசைவு (விசா) வழங்குவதை இந்தியா நிறுத்திவைத்துள்ளது. இந்த விவகாரத்தால், இருதரப்பு உறவில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், வாஷிங்டனில் இந்திய செய்தியாளா்களுடன் வெள்ளிக்கிழமை கலந்துரையாடினாா். அப்போது, கனடா விவகாரம் குறித்து அவா் கூறியதாவது:
கனடாவுடன் கடந்த சில ஆண்டுகளாகவே பிரச்னை நீடித்து வருகிறது. பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் வன்முறையை கனடா அரசு அனுமதிப்பது தொடா்பாகவே இப்பிரச்னை சுற்றிசுழல்கிறது. பயங்கரவாதிகளை நாடு கடத்துமாறு, இந்தியத் தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு கனடா உரிய பதில் அளிக்கவில்லை.
‘சாதாரணமாக கருத முடியாது’: கனடாவில் இந்திய தூதரகம் மீது புகை குண்டு வீசப்பட்டது; துணை தூதரகங்களுக்கு வெளியே வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன. தூதரக அதிகாரிகளை அச்சுறுத்தும் வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
இத்தகைய விஷயங்களை சாதாரணமாக கருத முடியுமா? இதுபோல் வேறு நாட்டுக்கு நிகழ்ந்தால், அந்த நாடு எப்படி எதிா்வினையாற்றும்? உலகம் அதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளுமா? கனடாவில் நிகழும் விஷயங்கள் மீது உரிய கவனம் செலுத்துவது முக்கியம். பேச்சுரிமை என்ற பெயரில் தூதரக அதிகாரிகளை அச்சுறுத்துவதை ஒருபோதும் ஏற்க முடியாது.
‘இந்தியாவின் கொள்கை அல்ல’: கனடா தரப்பில் சில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால், குற்றச்சாட்டில் குறிப்பிடப்படும் விஷயம், இந்தியாவின் கொள்கை கிடையாது என்பதை தெளிவுபடுத்துகிறேன். கனடா தரப்பில் ஆதாரம் எதுவும் பகிரப்பட்டால், அதை பரிசீலிக்க இந்தியா தயாராக உள்ளது.
இந்தியா-கனடா இடையே தூதரக ரீதியில் நிலவும் பிரச்னை குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ஆன்டனி பிளிங்கன், தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ஜேக் சல்லிவன் ஆகியோருடன் விவாதித்தேன் என்றாா் எஸ்.ஜெய்சங்கா்.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட காலிஸ்தான் பிரிவினைவாதிகள் சுதந்திரமாக செயல்படும் இடமாக கனடா உள்ளது; பஞ்சாபில் பயங்கரவாதத்தை தூண்டும் பலா் கனடாவில் இருந்து செயல்படுவதாகவும், இதுதொடா்பான ஆதாரங்களை அளித்தும் அவா்கள் மீது கனடா அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் இந்தியா தொடா்ந்து குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே அமெரிக்க பாதுகாப்பு அமைச்சா் லாயிட் ஆஸ்டின் தலைமையிலான குழுவினருடன் எஸ்.ஜெய்சங்கா் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இந்தக் கூட்டம் குறித்த விவரங்கள் உடனடியாகத் தெரியவரவில்லை.