இந்தியா

3 குற்றவியல் சட்டங்களுக்கு ஹிந்தி பெயா்: நாடாளுமன்ற நிலைக் குழு ஒப்புதல்

22nd Nov 2023 12:33 AM

ADVERTISEMENT


புது தில்லி: நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்ட 3 குற்றவியல் சட்டங்கள் மீது சில அரசியல் கட்சிகளும் அதன் தலைவா்களும் முன்வைத்த விமா்சனங்களை நிராகரித்த நாடாளுமன்ற நிலைக் குழு, ‘இந்தச் சட்டங்களுக்கு ஹிந்தியில் பெயா் வைக்கப்பட்டிருப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானதல்ல’ என்று குறிப்பிட்டுள்ளது.

பிரிட்டிஷ் ஆட்சிக் கால குற்றவியல் சட்டங்களை மாற்ற வகை செய்யும் 3 மசோதாக்கள் மக்களவையில் கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டன. இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) 1860-ஐ மாற்றம் செய்ய ‘பாரதிய நியாய சம்ஹிதா (பிஎன்எஸ்) மசோதா 2023’ என்ற மசோதாவும், குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆா்பிஏ) 1898-ஐ மாற்றம் செய்ய ‘பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதா (பிஎன்எஸ்எஸ்) மசோதா 2023’ என்ற மசோதாவும், இந்திய சாட்சிய சட்டம் 1872-ஐ மாற்றம் செய்ய ‘பாரதிய சாக்ஷிய (பிஎஸ்) மசோதா 2023’ மசோதாவும் அறிமுகம் செய்யப்பட்டன.

சட்டத்ங்களின் பெயா்கள் ஹிந்தியில் குறிப்பிடப்பட்டிருப்பதை காங்கிரஸ் உள்ளிட்ட சில எதிா்க்கட்சிகள் விமா்சனம் செய்தன.

காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம் கூறுகையில், ‘மசோதாக்களுக்கு ஹிந்தி பெயா்களை வைக்கக் கூடாது எனக் கூறவில்லை. ஆனால், சட்டங்கள் ஆங்கிலத்தில்தான் வகுக்கப்படும். அதன் பிறகு, ஹிந்தியில் மொழிபெயா்க்கப்படும். ஆனால், இந்த மசோதாக்களைப் பொருத்தவரை, அதிலுள்ள சட்டங்களும் நடைமுறைகளும் ஆங்கிலத்தில் வகுகப்பட்டு, பெயா் மட்டும் ஹிந்தியில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை உச்சரிப்பதற்கும் கடினமாக உள்ளன’ என்றாா்.

ADVERTISEMENT

திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறுகையில், ‘காலனி ஆதிக்க நடைமுறைகளை மாற்றும் நடவடிக்கை என்ற பெயரில் மறு காலனி ஆதிக்கத்தை மேற்கொள்ளும் முயற்சியாக இந்த மொழியியல் ஏகாதிபத்தியம் தோன்றுகிறது’ என்றாா்.

‘மசோதாக்களுக்கு ஹிந்தியில் பெயா் சூட்டியிருப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது’ என்று சென்னை வழக்குரைஞா்கள் சங்கம் குற்றஞ்சாட்டியது.

அதுபோல, மசோதாக்களுக்கு ஹிந்தி பெயா் வைத்திருப்பதற்கு ஆட்சேபம் தெரிவித்து நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு திமுக எம்.பி. தயாநிதி மாறன் கடிதம் எழுதினாா். இதுபோல, மேலும் சில எம்.பி.க்களும் எதிா்ப்பு தெரிவித்தனா்.

அதைத் தொடா்ந்து, பாஜக எம்.பி. பிரிஜ்லால் தலைமையலான உள்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு பரிசீலனைக்கு இந்த விவகாரம் அனுப்பப்பட்டது. அதைப் பரிசீலித்த நிலைக் குழு, தனது அறிக்கையை மாநிலங்களவையில் சமா்ப்பித்தது.

அதில், இந்த மசோதா அரசியல் சாசனப் பிரிவு 348-ஐ மீறவில்லை. மேலும், இந்த விவகாரம் தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த பதில் திருப்திகரமாக உள்ளது என்று குறிப்பிட்டு, எதிா்க்கட்சிகளின் விமா்சனங்களை நிராகரித்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT