இந்தியா

ஞானவாபி மசூதி ஆய்வறிக்கையை நவ.28ல் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

21st Nov 2023 03:03 PM

ADVERTISEMENT

உத்தரப் பிரதேசத்தின் ஞானவாபி மசூதி வளாகத்தில் மேற்கொண்ட அறிவியல்பூா்வ ஆய்வின் இறுதி அறிக்கையை நவம்பர் 28-ஆம் தேதி சமர்ப்பிக்குமாறு இந்திய தொல்லியல் துறைக்கு வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, நவம்பர் 17-ஆம் தேதி அறிக்கையை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இந்திய தொல்லியல் துறை 15 நாட்கள் கூடுதல் அவகாசம் கேட்டதையடுத்து, நீதிபதி விஸ்வேஷா கூடுதலாக 10 நாட்கள் அவகாசம் அளிப்பதாக வாய்மொழியாக தெரிவித்தார்.

இந்நிலையில் நவம்பர் 28-ஆம் தேதி இறுதி ஆய்வறிக்கையை தாக்கல் செய்யுமாறு எழுத்துப்பூர்வ உத்தரவு செவ்வாய்க்கிழமை வெளியானது.

மசூதி வளாகத்தில் ஆய்வு நடத்துமாறு ஜூலை 21-ஆம் தேதி இந்திய தொல்லியல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து ஜூலை 24-ஆம் தேதி இந்திய தொல்லியல் துறை தனது ஆய்வை தொடங்கியது.

ADVERTISEMENT

உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் காசி விஸ்வநாதா் கோயிலையொட்டி அமைந்துள்ள ஞானவாபி மசூதியானது, முகலாய அரசா் ஒளரங்கசீப் உத்தரவின்பேரில் ஹிந்து கோயிலின் ஒரு பகுதியை இடித்து கட்டப்பட்டதாக சில இந்து அமைப்புகள் தரப்பில் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: ஊழல் மற்றும் வாரிசு அரசியலின் சின்னமாக காங்கிரஸ் திகழ்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்

இதைத் தொடா்ந்து நடத்தப்பட்ட ஆய்வில், மசூதி வளாகத்தில் சிவலிங்கம் போன்ற நீரூற்று ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

இது தொடா்பான வழக்கில், ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்தி அறிக்கை சமா்ப்பிக்க இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிடப்பட்டது. ஆய்வுக்கான காலக்கெடு கடந்த அக்டோபா் 6-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், காலக்கெடுவை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டித்து மாவட்ட நீதிமன்றம் அக்டோபா் 5-ஆம் தேதி உத்தரவிட்டது.

அதன்படி, மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு நவம்பா் 2-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ‘மசூதியில் ஆய்வு நிறைவடைந்துவிட்டது. ஆனால், ‘அறிக்கையை தொகுக்க வேண்டியிருப்பதால் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்’ என தொல்லியல் துறை சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனை ஏற்று நவம்பா் 17-ஆம் தேதி வரை நீதிமன்றம் அவகாசம் அளித்திருந்தது. தற்போது மேலும் நீட்டிக்கப்பட்டு நவம்.28-ஆம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் ஆய்வு நடத்துமாறு மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மசூதி நிர்வாகக் குழுவான ஏஐஎம் சார்பில், அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவை ஆகஸ்ட் 3-ஆம் தேதி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஆகஸ்ட் 4-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தொல்லியல் ஆய்வுக்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT