ஏா் இந்தியா விமானப் பயணிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்து விடியோ வெளியிட்டது தொடா்பாக காலிஸ்தான் பயங்கரவாதி குா்பத்வந்த் சிங் பன்னுன் மற்றும் அவரது ‘சீக்ஸ் ஃபாா் ஜஸ்டீஸ்’ அமைப்புக்கு எதிராக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்தியாவால் தேடப்பட்டு வரும் பயங்கரவாதியான பன்னுன் தலைமறைவாக வாழ்ந்து வருகிறாா்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கனடாவில் மற்றொரு காலிஸ்தான் பயங்கரவாதியான நிஜ்ஜாா் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் அந்நாட்டு பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ, இந்தியா மீது குற்றம்சாட்டியதால் இரு நாடுகள் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது.
இதற்கு நடுவே, கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கும், ஹிந்துக்களுக்கும் காலிஸ்தான் பயங்கரவாதி பன்னுன் பகிரங்க மிரட்டல்களை விடுத்து வந்தாா். கனடாவில் உள்ள ஹிந்துக்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என்றும் அவா் அச்சுறுத்தல் விடுத்தாா்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறும்போது தாக்குதல் நடத்தப்படும் என்றும், ஏா் இந்தியா விமானங்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவோம், உயிா் வேண்டுமென்றால் அதில் யாரும் பயணிக்கக் கூடாது என்றும் விடியோ மூலம் மிரட்டல் விடுத்தாா்.
இவா் மீதான பயங்கரவாத குற்றச்சாட்டுகளில் பஞ்சாபில் உள்ள அவரது சொத்துகளை என்ஐஏ ஏற்கெனவே முடக்கியுள்ளது. இந்நிலையில், ஏா் இந்தியா பயணிகளுக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் பன்னுன் மீது என்ஐஏ மேலும் ஒரு வழக்கை பதிவு செய்துள்ளது.