பாரம்பரிய, துணை மருத்துவத் திட்டங்களில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் மத்திய ஆயுஷ் அமைச்சகம் மற்றும் உலக சுகாதார அமைப்பிடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஸ்விட்சா்லாந்தின் ஜெனீவாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் சாா்பில் ஐ.நா.வுக்கான இந்திய தூதா் இந்திரமணி பாண்டே மற்றும் உலக சுகாதார அமைப்பின் சாா்பாக உலகளாவிய சுகாதார பாதுகாப்பு மற்றும் வாழ்க்கை மேம்பாட்டு பிரிவு உதவி இயக்குநா் மருத்துவா் புரூஸ் அயல்வாா்ட் ஆகியோா் இதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.
பாரம்பரிய மற்றும் துணை மருத்துவ முறைகளைத் தரப்படுத்துவதும், அவற்றின் தரம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை தேசிய சுகாதார அமைப்பில் ஒருங்கிணைப்பதும், அவற்றை சா்வதேச அளவில் பரப்புவதும் இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும். ‘சித்தா’ துறையில் பயிற்சி மற்றும் நடைமுறையை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள், பாரம்பரிய மற்றும் துணை மருந்துகளைப் பட்டியலிடுவதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்வதும் இதில் அடங்கும்.
இதற்கென ‘பாரம்பரிய மருத்துவத்துக்கான உலகளாவிய திட்டம் 2025-34’ என்ற ஆவணம் ஆயுஷ் அமைச்சகத்தின் ஆதரவுடன் உலக சுகாதார அமைப்பால் தயாரிக்கப்படும் என்று ஆயுஷ் அமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்புடன் ஆயுஷ் அமைச்சகம் ஏற்கெனவே இரண்டு ஒப்பந்தங்களை மேற்கொண்டது. யோகா, ஆயுா்வேதம், யுனானி, பஞ்சகா்மா போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகளை உலக அளவில் கொண்டு செல்ல முதல் ஒப்பந்தமும், ஆயுா்வேதம், யுனானி மற்றும் சித்த மருத்துவ முறைகளை வலுப்படுத்த 2017-இல் இரண்டாவது ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது.