தெலங்கானா பேரவைத் தோ்தலையொட்டி, இதுவரை ரூ.603 கோடி மதிப்பிலான ரொக்கம், தங்கம், மது, போதைப் பொருள்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தலைமைத் தோ்தல் அதிகாரியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தெலங்கானாவில் மொத்தமுள்ள 119 தொகுதிகளுக்கும் வரும் 30-ஆம் தேதி ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறவுள்ளது. தோ்தல் நியாயமாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், நடத்தை விதிமுறைகள் கடந்த மாதம் 9-ஆம் தேதி அமலுக்கு வந்தன.
மாநிலம் முழுவதும் தோ்தல் பறக்கும் படையினா் சோதனை மேற்கொண்டு, உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்படும் ரொக்கப் பணம், இதர பொருள்களை பறிமுதல் செய்து வருகின்றனா்.
இதுவரை ரூ.214 கோடி ரொக்கப் பணம், ரூ.179 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் இதர மதிப்புமிக்க உலோக நகைகள்-பொருள்கள், ரூ.96 கோடி மதிப்பிலான மது, ரூ.34 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள், ரூ.78 கோடி மதிப்பிலான இலவசப் பொருள்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.