நாட்டில் ராஜஸ்தானில்தான் அதிக விலைக்கு பெட்ரோல் விற்பனை செய்யப்படுவதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சா் ஹா்தீப்சிங் புரி தெரிவித்துள்ளாா்.
ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தோ்தல் நவ.25-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தற்போது நாட்டில் பெட்ரோலின் சராசரி விலை லிட்டருக்கு ரூ.96.72-ஆக உள்ளது. ஆனால் ராஜஸ்தானின் கங்காநகரில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.113.34-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ராஜஸ்தானில் இரண்டு ஆண்டுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் மூலம் ரூ.35,975 கோடி வரியை மாநில அரசு வசூலித்துள்ளது. 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பெட்ரோல், டீசல் மூலம் வசூலிக்கப்பட்ட வரியுடன் ஒப்பிடுகையில், ராஜஸ்தானில் வசூலிக்கப்பட்டுள்ள வரித்தொகை மிக அதிகம் என்று தெரிவித்துள்ளாா்.