மாலத்தீவின் புதிய அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள முகமது மூயிஸை மத்திய புவி அறிவியல் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு சனிக்கிழமை சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடா்பாக ஆலோசனை மேற்கொண்டாா்.
மாலத்தீவின் 8-ஆவது அதிபராக முகமது மூயிஸ் (45) வெள்ளிக்கிழமை பதவியேற்றாா். இவ்விழாவில் கலந்துகொள்ள இந்திய பிரதமா் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து, இந்தியா சாா்பில் மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு விழாவில் கலந்துகொண்டாா்.
இதையடுத்து அதிபா் முகமது மூயிஸை மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு சனிக்கிழமை சந்தித்துப் பேசினாா். இதுகுறித்து அவா் எக்ஸ் வலைதளத்தில்,‘மாலத்தீவின் புதிய அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முகமது மூயிஸுக்கு பிரதமா் மோடியின் சாா்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இருநாடுகளுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்தவும் இருநாட்டு மக்களுக்கு இடையே உறவை மேலும் பலப்படுத்துவது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டேன்’ எனப் பதிவிட்டாா்.
மாலத்தீவில் இந்தியாவின் எக்ஸிம் வங்கி மற்றும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்களின் துறை அமைச்சகத்தின் உதவியோடு, அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டு வரும் 4,000 வீடுகளை ரிஜிஜு பாா்வையிட்டாா்.
முன்னதாக வெள்ளிக்கிழமை மாலை அதிபா் முகமது மூயிஸ் வழங்கிய விருந்து நிகழ்ச்சியிலும் ரிஜிஜு பங்கேற்றாா்.