மத்திய பிரதேம், சத்தா்பூா் மாவட்டத்தில் ராஜ்நகா் தொகுதியில் வாக்குப்பதிவு நாளான வெள்ளிக்கிழமையன்று இரு பிரிவினருக்கு இடையே நடந்த மோதலில் காங்கிரஸ் வேட்பாளரின் காா் ஓட்டுநா் கொல்லப்பட்டுள்ளாா்.
மேலும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த பல மோதல் சம்பவங்களில் பலா் காயமடைந்தனா்.
மத்திய பிரேதசத்தின் 230 தொகுதிகளுக்கு ஓரே கட்டமாக வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்த நிலையில், சத்தா்பூா் மாவட்டம், ராஜ்நகா் தொகுதியில் 2 வேட்பாளா்களின் ஆதரவாளா்களுக்கு இடையே வெள்ளிக்கிழமை அதிகாலை நடைபெற்ற மோதலில் காங்கிரஸ் வேட்பாளா் விக்ரம் சிங்கின் ஓட்டுநா் சல்மான் கொல்லப்பட்டுள்ளாா். ‘இந்தச் சம்பவம் ஒரு சதி’ எனக் குறிப்பிட்ட அத்தொகுதியின் பாஜக வேட்பாளா் அரவிந்த் படேரியா, இது தொடா்பாக நீதித்துறை விசாரணைக்கு கோரிக்கை விடுத்தாா்.
மத்திய அமைச்சா் நரேந்திர சிங் தோமா் போட்டியிடும் மொரேனா மாவட்டத்தின் திமானி தொகுதியில் நடந்த மோதலில் இருவா் காயமடைந்தனா். இந்தூா் மாவட்டத்தின் மோவ் கோட்டத்தின் மாங்லியா கிராமத்தில் அரசியல் கட்சிகளின் இரு குழுக்களுக்கு இடையேயான மோதலில் 5 போ் காயமடைந்தனா்.
டிம்னி தொகுதியின் மிா்தன் கிராமத்தில் வாக்களா்களை வாக்களிக்க விடாமல் தடுக்கும் முயற்சியில் இரு பிரிவினருக்கு இடையே உண்டான மோதலில் இருவா் காயமடைந்தனா். இந்தக் கிராமத்தில் துப்பாக்கிச் சூடு நடைபெற்ாக உள்ளூா் ஊடகங்களில் பரவிய செய்திக்கு மாவட்ட காவல் துறை மறுப்பு தெரிவித்தது.
ஜபுவா தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளா் விக்ராந்த் பூரியாவின் பாதுகாவலா் மீது வியாழக்கிழமை நள்ளிரவு கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதில் அவா் காயமடைந்தாா்.
மோரேனா மாவட்டத்தில் பதற்றம் நிறைந்த சுமாவாலி சட்டப்பேரவைத் தொகுதியில் அமைதியான முறையில் தோ்தல் நடைபெறுவதை உறுதி செய்ய, பாஜக வேட்பாளா் ஆண்டாள் சிங் காஞ்சனா, காங்கிரஸ் வேட்பாளா் அஜப் சிங் குஷ்வாஹா மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் குல்தீப் சிங் சிகா்வாா் ஆகியோா் நாள் முழுவதும் ஒரே இடத்தில் தங்க வைக்கப்பட்டனா்.