இந்தியா

ஞானவாபி மசூதி ஆய்வறிக்கை தாக்கல் செய்ய 10 நாட்கள் கூடுதல் கால அவகாசம் வழங்கியது நீதிமன்றம்

18th Nov 2023 06:43 PM

ADVERTISEMENT

ஞானவாபி மசூதியில் மேற்கொண்ட அறிவியல்பூா்வ ஆய்வு முடிவு அறிக்கையை சமா்ப்பிக்க இந்திய தொல்லியல் துறைக்கு மேலும் 10 நாள்கள் அவகாசம் அளித்து வாரணாசி மாவட்ட நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.

 

உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் காசி விஸ்வநாதா் கோயிலையொட்டி அமைந்துள்ள ஞானவாபி மசூதியானது, முகலாய அரசா் ஒளரங்கசீப் உத்தரவின்பேரில் ஹிந்து கோயிலின் ஒரு பகுதியை இடித்து கட்டப்பட்டதாக ஹிந்துக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இதைத் தொடா்ந்து நடத்தப்பட்ட ஆய்வில், மசூதி வளாகத்தில் சிவலிங்கம் போன்ற நீரூற்று ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

ADVERTISEMENT

இது தொடா்பான வழக்கில், ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்தி அறிக்கை சமா்ப்பிக்க இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிடப்பட்டது. ஆய்வுக்கான காலக் கெடு கடந்த அக்டோபா் 6-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், காலக் கெடுவை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டித்து மாவட்ட நீதிமன்றம் அக்டோபா் 5-ஆம் தேதி உத்தரவிட்டது.

அதன்படி, மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு நவம்பா் 2-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ‘மசூதியில் ஆய்வு நிறைவடைந்துவிட்டது. ஆனால், ‘அறிக்கையை தொகுக்க வேண்டியிருப்பதால் கால அவகாசத்தை நீடிக்க வேண்டும்’ என தொல்லியல் துறை சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனை ஏற்று நவம்பா் 17-ஆம் தேதி வரை நீதிமன்றம் அவகாசம் அளித்தது.

அவகாசம் முடிந்த நிலையில், மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தொல்லியல் துறை சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘அறிக்கை தாக்கல் செய்ய மேலும் 15 நாள்கள் அவகாசம் அளிக்க வேண்டும்’ என கோரினாா்.

இதனை ஏற்றுக்கொண்ட மாவட்ட நீதிபதி ஏ.கே.வைஷ்ணவ், தொல்லியல் துறை தனது அறிக்கையை வரும் 28-ஆம் தேதி தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT