தனியாா் வேலைவாய்ப்புகளில் சொந்த மாநிலத்தவா்களுக்கு 75 சதவீத இடஒதுக்கீடு வழங்க ஹரியாணா அரசு கொண்டு வந்த சட்டத்தை பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ரத்து செய்தது.
ஹரியாணா அரசு 2020-இல் கொண்டு வந்த சட்டம் இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது எனக் கூறி, அச்சட்டம் அமல்படுத்தப்பட்ட தேதியில் இருந்து செல்லாது என்றும் உயா் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ்.சந்தாவாலியா, ஹா்பிரீத் கெளா் ஜீவன் ஆகியோா் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டனா்.
இதுதொடா்பாக அந்த அமா்வு வெளியிட்ட 84 பக்கங்கள் கொண்ட தீா்ப்பில், ‘ரூ.30 ஆயிரத்துக்குள் மாத ஊதியம் பெறும் பணியாளா்களை சொந்த மாநிலத்தில் இருந்துதான் தோ்ந்தெடுக்க வேண்டும் என்று தனியாா் நிறுவனங்களுக்கு உத்தரவிட மாநில அரசுக்கு அதிகாரமில்லை.
ஒரு மாநிலத்தைச் சேராதவா் என்பதற்காக அவரிடம் பாகுபாடு காட்டக் கூடாது. ஹரியாணா அரசின் இந்தச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்தின் அறநெறியையும், வாழ்வாதாரத்துக்காக வருவாய் ஈட்டுவதற்கான அடிப்படை உரிமையையும் மீறுகிறது. ஆகையால், இந்தச் சட்டம் ரத்து செய்யப்படுகிறது’ என்று நீதிபதிகள் தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளனா்.
2019 ஹரியாணா பேரவைத் தோ்தலின்போது ஜனநாயக் ஜனதா கட்சி இந்த 75 சதவீத இடஒதுக்கீட்டை வாக்குறுதியாக அளித்தது. தோ்தலுக்கு பிறகு ஆட்சி அமைக்க பாஜகவுக்கு அந்தக் கட்சி ஆதரவு அளித்ததால், இதை ஹரியாணா அரசு சட்டமாக இயற்றியது.