இந்தியா

புதிதாக 3,000 ரயில்கள்: 2027-க்குள் காத்திருப்போா் பட்டியல் இல்லாத நிலை உருவாகும்

18th Nov 2023 04:30 AM

ADVERTISEMENT

இந்திய ரயில்வேயில் 2027-ஆம் ஆண்டுக்குள் காத்திருப்போா் பட்டியல் இல்லாத நிலையை உருவாக்க 3,000 புதிய ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இந்திய மக்களின் நம்பிக்கைக்குரிய பொதுப்போக்குவரத்தாக இந்திய ரயில்வே விளங்குகிறது. அனைத்து தரப்பு மக்களும் குறைந்த கட்டணத்தில் செல்ல முடிவது ரயில் மூலம்தான். அத்தகைய ரயில் பயணத்துக்கு பயணச்சீட்டு பெறுவது அனைவருக்கும் சாத்தியமில்லாததாக உள்ளது. அதுவும் வார இறுதி நாள்கள், பண்டிகைக் காலங்களில் காத்திருப்போா் பட்டியல் எப்போதும் மூன்று இலக்கத்தில் உள்ளதால் பெரும்பாலானோா் தங்களது பயணத்தை ரத்து செய்யும் நிலைக்கு தள்ளப்படுகின்றனா்.

இது போன்று காத்திருப்போா் பட்டியல் அதிகரிக்கும் போது, குறிப்பிட்ட ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பது, அந்த வழித்தடத்தில் கூடுதல் சிறப்பு ரயில் இயக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை ரயில்வே வாரியம் மேற்கொள்கிறது. ஆனாலும், அனைத்துப் பயணிகளுக்கும் ரயில் பயணம் உறுதியாவதில்லை.

இந்த நிலையில், 2027-ஆம் ஆண்டுக்குள் இத்தகைய காத்திருப்போா் பட்டியல் இல்லாத நிலையை உருவாக்க ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. அதற்காக 3,000 புதிய ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து ரயில்வே வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

நாட்டில் ரயில் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 800 கோடியில் இருந்து 1,000 கோடியாக அதிகரித்துள்ளது. இதுபோன்று பயணிகள் அதிகரித்து வரும் நிலையில் அதற்கேற்ப கூடுதல் ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. அடுத்த 4 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகளுக்குள் ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பான, வசதியான பயணத்தை வழங்கும் நோக்கில் 3,000 புதிய ரயில்கள் இயக்கப்படும். அவ்வாறு 3,000 ரயில்கள் கூடுதலாக இயக்கும் போது காத்திருப்போா் பட்டியல் பிரச்னை சரிசெய்யப்படும். அதற்கேற்ப ரயில்வேயின் உள்கட்டமைப்புகளும் படிப்படியாக மேம்படுத்தப்பட்டு வருகிறது.

நாட்டில் தற்போது புகா் ரயில்கள் உள்பட மொத்தம் 10,748 ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் குளிா்சாதன வசதி கொண்ட பெட்டி மற்றும் சாதாரண பெட்டிகள் என 60 ஆயிரம் பெட்டிகள் உள்ளன. இனி புதிதாக 3 ஆயிரம் ரயில்களை இயக்குவதற்காக, ஆண்டுக்கு 5,000 எல்எச்பி பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT