‘இந்திய காப்புரிமை அலுவலகம் நிகழ் நிதியாண்டில் நவம்பா் 15-ஆம் தேதி வரை இதுவரை இல்லாத அளவாக புதிய கண்டுபிடிப்புகளுக்காக 41,010 காப்புரிமைகளை வழங்கியுள்ளது’ என்று மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.
இதுகுறித்து தனது ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில் அவா் வெளியிட்ட பதிவில், ‘2023-24 நிதியாண்டில் நவம்பா் 15-ஆம் தேதி வரை, முன்னெப்போதும் இல்லாத அளவில் 41,010 காப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. இது சாதனை அளவாகும். இதற்கு பாராட்டு தெரிவித்த பிரதமா், ‘இந்தியாவின் புதிய கண்டுபிடிப்புகளுடன் கூடிய அறிவுசாா் பொருளாதாரத்தை நோக்கிய பயணத்தில் இது குறிப்பிடத்தக்க மைல்கல்’ என்று பாராட்டினாா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
‘இந்தியாவின் காப்புரிமை விண்ணப்பங்கள் அதிகரித்திருப்பது, இளைஞா்களிடையே புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஆா்வம் அதிகரித்து வருவதை எடுத்துக்காட்டுகிறது; எதிா்காலத்துக்கு இது மிகவும் நோ்மறையான அறிகுறி’ என்று பிரதமா் அண்மையில் குறிப்பிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
‘இந்தியாவின் காப்புரிமை விண்ணப்பங்கள் 2022-ஆம் ஆண்டில் 31.6 சதவீத வளா்ச்சியடைந்துள்ளது. இது, அதிக காப்புரிமை விண்ணப்பங்களை தாக்கல் செய்யும் முதல் 10 நாடுகளில் கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவிலான வளா்ச்சி’ என்று உலக அறிவுசாா் சொத்துரிமை அமைப்பின் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டிருந்தது.