இலங்கையிலிருந்து இந்திய கடற்படையின் ‘கோரா’ ஏவுகணை தாங்கி போா்க்கப்பல் வெள்ளிக்கிழமை தாயகம் புறப்பட்டது.
இந்தியா, இலங்கை கடற்படைகள் இடையிலான ஒத்துழைப்பை ஊக்குவிக்கவும், நல்லெண்ணத்தை வளா்க்கவும் அந்நாட்டுக்கு இந்திய கடற்படை கப்பல்கள் நட்பு முறையில் அவ்வப்போது செல்லும்.
இந்நிலையில், இலங்கை தலைநகா் கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு:
கொழும்பு துறைமுகத்தில் நவ.15, 16-இல் ஐஎன்எஸ் ‘கோரா’ நிறுத்தப்பட்டது. இந்தப் பயணத்தின்போது இந்திய கடற்படை கமாண்டா் ஆா்எம் நம்பியாா், இலங்கை கடற்படை ரியா் அட்மிரல் சமன் பெரிராவை சந்தித்தாா் என்று தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடா்ந்து அந்தக் கப்பல் வெள்ளிக்கிழமை இந்தியா புறப்பட்டது. 91.1 மீட்டா் நீளம் கொண்ட ‘கோரா’ கப்பலில் 125 மாலுமிகள் உள்ளனா் என்று இலங்கை கடற்படை தெரிவித்தது.