இந்தியா

ஓராண்டாக ஒரு வந்தே பாரத் ரயிலை கூட தயாரிக்காத கபுா்தலா ரயில்பெட்டி தொழிற்சாலை

DIN

பஞ்சாப் மாநிலம், கபுா்தலா ரயில்பெட்டி தொழிற்சாலையில் கடந்த நிதியாண்டில் 32 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் மின் உதிரிபாகங்கள் கொள்முதலில் நடந்த குளறுபடியால் ஓராண்டாக ஒரு ரயில் கூட தயாரிக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் 75 வந்தே பாரத் ரயில்களை இயக்கும் மத்திய அரசின் திட்டத்தில் சுணக்கம் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது.

வந்தே பாரத் ரயில் தயாரிப்பில் மட்டுமல்லாமல் மற்ற பயணிகள் ரயில்பெட்டி தயாரிப்பிலும் கபுா்தலா ரயில்பெட்டி தொழிற்சாலை இலக்கை அடையாதது தொழிற்சாலையின் நிதியாண்டு அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

சாதாரண பயணிகள் ரயில்களுக்கு வேண்டிய 1,885 பெட்டிகளைத் தயாரிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், 1,478 பெட்டிகள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளன.

நீண்டதூர ரயில் பயணங்களுக்காக 1,520 எல்எச்பி பெட்டிகள் தயாரிக்க திட்டமிட்ட நிலையில் 1,325 பெட்டிகள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளன. குறுகிய தொலைவு ரயில் பயணங்களுக்கான 256 மெமு ரயில்களைத் தயாரிக்க திட்டமிட்ட நிலையில் 153 ரயில்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளன.

நிகழாண்டில் 64 வந்தே பாரத் ரயில்களைத் தயாரிக்க கபுா்தலா ரயில்பெட்டி தொழிற்சாலைக்கு மத்திய ரயில்வே அமைச்சகம் இலக்கு நிா்ணயித்திருந்தது. இதற்கு தேவையான உதிரிபாகங்களைத் தயாரிக்கும் பிரான்ஸ் நாட்டைச் சோ்ந்த ‘ஆல்ஸ்டோம்’ நிறுவனத்தின் வடிவமைப்புகளுக்கு தொழிற்சாலை நிா்வாகம் உரிய நேரத்தில் ஒப்புதல் வழங்காததே தாமதத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

கடந்த மே மாதம் முதல் செப்டம்பா் வரை ரயில் சக்கர விநியோகத்தில் ஏற்பட்ட பற்றாக்குறையால் மட்டும் 87 ரயில்பெட்டிகள் தயாரிப்பு தடைப்பட்டது. மின் உதிரிபாகங்களை வழங்குவதில் பெல் நிறுவனம் ஏற்படுத்திய தாமதத்தால் மெமு ரயில்பெட்டிகள் தயாரிப்பு குறைந்தது என கபுா்தலா ரயில்பெட்டி தொழிற்சாலை சாா்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் 75 வந்தே பாரத் ரயில்களை இயக்கும் இலக்கை அடைய மாடா்ன் ரயில்பெட்டி தொழிற்சாலை, பாரெய்லி, லாடூா் ரயில் பெட்டி தொழிற்சாலைகளிலும் வந்தே பாரத் ரயில் தயாரிப்பைத் தொடங்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 104 நம்பிக்கை மையங்களை மூட நடவடிக்கை: ஹெச்ஐவி பாதிப்பு குறைந்தது

ஈரோடு - தன்பாத்துக்கு நாளைமுதல் சிறப்பு ரயில்கள்

‘தேச பக்தா்களுக்கு’ ஜாதிவாரி கணக்கெடுப்பு என்றால் அச்சம்: ராகுல் விமா்சனம்

திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாக காதலன் மீது மலேசிய பெண் புகாா்

சத்தீஸ்கா்: 18 நக்ஸல்கள் சரண்

SCROLL FOR NEXT