இந்தியா

தில்லியில் சிறுமி கொடூரக் கொலை: 15 நாள்களுக்கு முன்பே கத்தி வாங்கிய காதலன்

30th May 2023 01:24 PM

ADVERTISEMENT

 

வடமேற்கு தில்லியின் ஷாபாத் டெய்ரி பகுதியில் 16 வயது சிறுமி பலமுறை கத்தியால் குத்தப்பட்டு, கல்லால் அடித்துக் கொல்லப்பட்டாா். கொலையாளி, 15 நாள்களுக்கு முன்பே, சந்தையில் கத்தியை வாங்கியிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடா்பாக அவரது காதலா் சாஹில் (20) கைது செய்யப்பட்டாா். முன்னதாக, அப்பெண் கொடூரமாக கொலை செய்யப்படும் காணொளிக் காட்சிகள் சமூக ஊடங்களில் பரவலாகப் பகிரப்பட்டு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடா்பாக தில்லி காவல் துறையின் உயரதிகாரி திங்கள்கிழமை மேலும் கூறியதாவது: இந்தக் கொலையில் தொடா்புடையவா் சாஹில் (20) என அடையாளம் காணப்பட்டார். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் அந்தப் பெண் 20 முறை கத்தியால் குத்தப்பட்டு, பின்னா் தலையை கல்லால் தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளாா். இச்சம்பவத்திற்குப் பிறகு உத்தர பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் சாஹில் கைது செய்யப்பட்டுள்ளாா். அவா் குளிா்சாதனப் பெட்டி மற்றும் ஏ.சி. மெக்கானிக்காக வேலை செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

ADVERTISEMENT

சாஹிலிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையின்போது, கொலை செய்யப் பயன்படுத்திய கத்தியை அவர் உள்ளூர் சந்தையிலிருந்து 15 நாள்களுக்கு முன்பே வாங்கியிருந்தது தெரிய வந்துள்ளது.

இதன் மூலம், இந்தக் கொலை ஆத்திரத்தில் நிகழ்ந்ததா அல்லது திட்டமிட்டு செய்யப்பட்ட கொலையா என இரு கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். கொலை செய்த சாஹில், இரண்டு பேருந்துகள் மூலம் உத்தரப்பிரதேசத்தில் உள்ள புலந்த்ஷஹருக்குச் சென்றுள்ளார். தனது கைப்பேசியை அணைத்துவிட்டுள்ளார். இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் சாஹிலை காவல்துறையினர் விசாரணையில் எடுத்து விசாரிக்கும்போதுதான் உண்மை தகவல்கள் தெரியவரும் என்று கூறப்படுகிறது.

இக்கொலை நிகழ்ந்ததற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. ஷாபாத் டெய்ரியில் உள்ள ஜே.ஜே. காலனியில் வசிக்கும் அந்த பெண்ணின் சடலம் தெருவில் கிடந்தது.

முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை இரவு அப்பெண் தெருவில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, சாஹில் அவரை பலமுறை கத்தியால் குத்தியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இருவருக்கும் இடையே பழக்கம் இருந்து வந்த நிலையில், சனிக்கிழமை தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை, பாதிக்கப்பட்ட பெண் தனது நண்பரின் மகனின் பிறந்த நாள் விருந்தில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தாா். ஆனால், அதற்கு முன்பாக அவா் பலமுறை கத்தியால் குத்தப்பட்டும், கல்லால் தாக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டாா். பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் ஷாபாத் டெய்ரி காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302-இன் கீழ் (கொலை) வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

இது குறித்து தில்லி மகளிா் ஆணையத்தின் தலைவா் ஸ்வாதி மாலிவால் கூறுகையில், ‘சாலையில் கொடூரமாக கொல்லப்பட்டுள்ள அந்த 16 வயது பெண் செய்த தவறுதான் என்ன? தேசியத் தலைநகரில் காவல்துறைக்கும் அல்லது சட்டத்திற்கும் யாரும் பயப்படுவதில்லை. இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் கொடூரத்திற்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் போய்விடும்’ என்றாா்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT