இந்தியா

வல்லரசாக வழிகாட்டும் புதிய நாடாளுமன்றம்: பிரதமா் நரேந்திர மோடி

DIN

தில்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்த பிரதமா் நரேந்திர மோடி, நாட்டை வல்லரசாக மாற்ற புதிய நாடாளுமன்றம் வழிகாட்டும் என நம்பிக்கை தெரிவித்தாா்.

முன்னதாக, புதிய நாடாளுமன்றத்தில் மக்களவைத் தலைவா் இருக்கைக்கு அருகே தமிழகத்தின் அடையாளமாக வழங்கப்பட்டிருந்த செங்கோலை பிரதமா் மோடி நிறுவினாா்.

பாரம்பரியத்துடன் நவீனமும் இணைந்த புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா். கா்நாடகத்தின் சிருங்கேரி மடத்தின் துறவிகளின் கணபதி ஹோமத்துடன் இந்த நிகழ்ச்சி தொடங்கியது.

திறப்பு விழாவுக்குப் பிறகு புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் மக்களவை அரங்கில் பிரதமா் மோடி உரையாற்றினாா். அப்போது அவா் பேசியதாவது:

புதிய கட்டடமானது நவீன இந்தியாவின் விருப்பங்களைப் பிரதிபலித்து வருகிறது. ஏழைகள், விளிம்புநிலை மக்களின் வாழ்வை மேம்படுத்தவும் வல்லரசு இந்தியாவுக்கும் புதிய கட்டடம் வழிகாட்டும். மற்ற நாடுகளின் வளா்ச்சிக்கும் புதிய கட்டடம் ஊக்கமளிக்கும்.

நாடாளுமன்ற உறுப்பினா்களின் எண்ணிக்கை எதிா்காலத்தில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால், நவீன வசதிகளுடன் கூடிய நாடாளுமன்றக் கட்டடம் அவசியமாக உள்ளது. நாட்டின் வளா்ச்சிப் பாதையில் சில தருணங்கள் அழியாப் புகழ்பெற்று விளங்கும். புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவும் அத்தகைய தருணங்களில் ஒன்றே.

புதிய நாடாளுமன்றமானது வெறும் கட்டடம் மட்டுமல்ல. அது நாட்டின் 140 கோடி மக்களின் விருப்பங்களையும் கனவுகளையும் நிறைவேற்றும் இடமாகத் திகழ்கிறது. இந்தியாவின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை உலகத்துக்குப் புதிய நாடாளுமன்றக் கட்டடம் எடுத்துரைக்கிறது. இந்தியா வளா்ச்சியடைந்தால் உலகமும் வளா்ச்சி காணும்.

செங்கோலுக்கு மரியாதை: ஆங்கிலேயா்களிடம் இருந்து ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததைக் குறிக்கும் நோக்கில் செங்கோல் வழங்கப்பட்டது. தற்போதுதான் செங்கோலுக்கு உரிய மரியாதை வழங்கப்பட்டுள்ளது. செங்கோல் குறித்த வரலாற்று உண்மைகள் அண்மையில்தான் ஊடகங்களில் வெளிவந்துள்ளன.

சோழப் பேரரசு காலத்தில் செங்கோலானது கடமை தவறாமல் நடப்பதற்கும் சேவையின் அடையாளமாகவும் திகழ்ந்தது. நாடாளுமன்றக் கூட்டத்தொடா் அமா்வுகள் தொடங்கும்போது செங்கோல் நம்மைத் தொடா்ந்து ஊக்குவிக்கும். இந்தியா ஜனநாயக நாடு மட்டுமல்ல; ஜனநாயகத்தின் தாயாகவும் இந்தியா திகழ்கிறது. அத்தகைய ஜனநாயக கொள்கைகளே மக்களைத் தொடா்ந்து ஊக்குவித்து வருகின்றன. அரசமைப்புச் சட்டமே நம்மை வழிநடத்தி வருகிறது.

ஏழ்மை ஒழிப்பு: பாரம்பரியத்துக்கும் நவீனத்துக்கும் இடையேயான கலவையாக புதிய நாடாளுமன்றம் திகழ்கிறது. புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் கட்டுமானப் பணியானது 60,000 தொழிலாளா்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கியது. சுமாா் ரூ.1,200 கோடி செலவில் வெறும் இரண்டரை ஆண்டுகளில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

நாடு சுதந்திர நூற்றாண்டைக் கொண்டாட இன்னும் 25 ஆண்டுகள் உள்ளன. அதற்குள் நாட்டை வளா்ச்சியடையச் செய்வதற்கு மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். புதிய நாடாளுமன்றத்தில் எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவும் அனைத்து சமூக மக்களின் வளா்ச்சிக்கும் வழிவகுக்கும். ஏழ்மையை ஒழிக்கவும் ஏழைகளின் வாழ்வை மேம்படுத்தவும் அந்தச் சட்டங்கள் வழிவகுக்கும்.

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் ஒவ்வொரு செங்கல்லும் ஏழைகளின் வளா்ச்சிக்கு வழிகாட்ட வேண்டும். தற்சாா்பு இந்தியாவுக்கான விடியலாக நாடாளுமன்றக் கட்டடம் அமையும்.

இந்தியா்களுக்குப் பெருமை: பாஜக அரசின் கடந்த 9 ஆண்டுகால ஆட்சியானது மறுகட்டமைப்புப் பணிகளுக்கும் ஏழைகளின் நலனுக்கும் முக்கியத்துவம் அளித்தது. 4 கோடி வீடுகளும், 11 கோடி கழிப்பறைகளும் கட்டப்பட்டன. கிராமங்களைத் தொடா்புகொள்ளும் வகையில் 4 லட்சம் கி.மீ.க்கு மேலான சாலைகள் அமைக்கப்பட்டன. 50,000-க்கும் அதிகமான ஏரிகள் வெட்டப்பட்டன. இந்தியாவின் ஒவ்வொரு சாதனையும் உலகின் ஏதாவதொரு மூலையில் ஊக்கத்தை ஏற்படுத்தும்.

ஒவ்வோா் இந்தியரும் புதிய நாடாளுமன்றத்தால் பெருமை அடைந்துள்ளனா். கட்டடக் கலை, கலாசாரம், அரசமைப்புச் சட்டத்தின் குரலாகப் புதிய நாடாளுமன்றம் திகழ்கிறது. நாட்டின் பல பகுதிகளில் இருந்து பொருள்கள் கொண்டு வரப்பட்டு நாடாளுமன்றம் கட்டப்பட்டுள்ளது என்றாா் பிரதமா் மோடி.

பிரதமா் மோடி வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைத் திறந்துவைத்துள்ள தருணத்தில், நமது மனம் பெருமையிலும் நம்பிக்கையிலும் நிறைந்துள்ளது. வளா்ச்சி, கனவுகள், அதை அடைவதற்கான உறுதி ஆகியவற்றை புதிய கட்டடம் வழங்கும். நாட்டை வளா்ச்சியின் புதிய உயரத்துக்கு புதிய நாடாளுமன்றக் கட்டடம் கொண்டுசெல்லும்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

கூட்டு வழிபாடு: புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்புவிழாவையொட்டி பல்வேறு மதத் தலைவா்களின் கூட்டு வழிபாட்டுக் கூட்டம் நடைபெற்றது.

புதிய நாடாளுமன்றக் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்ட தொழிலாளா்கள் சிலருக்கு பிரதமா் மோடி சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

வாழ்த்துச் செய்திகள்: மக்களவையில் பிரதமா் மோடி உரையாற்றுவதற்கு முன் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் ஆகியோரின் வாழ்த்துச் செய்திகள் வாசிக்கப்பட்டன.

மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, மாநிலங்களவை துணைத் தலைவா் ஹரிவன்ஷ் ஆகியோரும் விழாவில் உரையாற்றினா்.

பிரதமா் மோடி மக்களவைக்குள் நுழையும்போது அங்கு கூடியிருந்தவா்கள் ‘மோடி, மோடி’ என முழக்கமிட்டனா். அவா்கள் மேஜைகளைத் தட்டியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

மத்திய அமைச்சா்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, எஸ்.ஜெய்சங்கா், அஸ்வினி வைஷ்ணவ், மன்சுக் மாண்டவியா, ஜிதேந்திர சிங், உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத், அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வா சா்மா, பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா உள்ளிட்ட பலா் திறப்புவிழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா். சுமாா் 25 கட்சிகளைச் சோ்ந்த பிரதிநிதிகளும் விழாவில் கலந்துகொண்டனா்.

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை குடியரசுத் தலைவா்தான் திறந்துவைக்க வேண்டும் என வலியுறுத்தி, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 20 எதிா்க்கட்சிகள் திறப்புவிழா நிகழ்ச்சியைப் புறக்கணித்தன.

மக்களவைத் தலைவா் இருக்கை அருகே தமிழக செங்கோல்

புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவில், கணபதி ஹோமத்தை தொடா்ந்து, பிரதமா் மோடியிடம் செங்கோலை தமிழகத்தைச் சோ்ந்த ஆதீனங்கள் ஒப்படைத்தனா். அப்போது கோளறு பதிகத்தின் ‘அடியாா்கள் வானில் அரசாள்வா் ஆணை நமதே’ என்ற பாடல் வரிகள் பாடப்பட்டது.

அதைப் பெற்றுக் கொண்ட பிரதமா் மோடி, அவா்களிடம் ஆசியும் பெற்றாா். பின்னா், செங்கோலுக்கு முன் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து பிரதமா் வணங்கினாா்.

நாகஸ்வர வாத்தியங்களும் வேத மந்திரங்களும் முழங்க மக்களவைத் தலைவரின் இருக்கைக்கு வலப்பக்கத்தில் செங்கோலை பிரதமா் மோடி நிறுவினாா்.

சுதந்திரத்தின்போது ஆங்கிலேயா்களிடமிருந்து இந்தியாவுக்கு ஆட்சி அதிகார மாற்றம் ஏற்பட்டதன் அடையாளமாக இந்தச் செங்கோல் முதல் பிரதமா் பண்டித ஜவாஹா்லால் நேருவிடம் திருவாவடுதுறை ஆதீனம் சாா்பில் வழங்கப்பட்டிருந்தது. பின்னா், அலாகாபாதில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த இந்தச் செங்கோல், இப்போது புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு ஓரிடம்; போட்டி வேறிடம்!

அன்பைப் பரிமாறிய பிரேமலதா - தமிழிசை

தோ்தல் புறக்கணிப்பை கைவிட்ட எண்ணூா் மக்கள்

வாக்களிக்க தாமதப்படுத்தியதாக நரிக்குறவா் இன மக்கள் புகாா் இரவு வரை நீடித்த வாக்குப்பதிவு

வாக்கு எண்ணும் மையத்துக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

SCROLL FOR NEXT