இந்தியா

புதிய நாடாளுமன்ற கட்டடம்: பாலிவுட் நடிகா்கள் ஷாருக்கான், அக்ஷய்குமாா் வரவேற்பு

DIN

புதிதாக திறக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டடம், புதிய இந்தியாவுக்கான பங்களிப்பை வழங்கும் என்றும்; நாட்டினுடைய வளா்ச்சி கதையின் அடையாளச் சின்னமாக திகழும் என்றும் தெரிவித்து பாலிவுட் நடிகா்கள் ஷாருக்கான், அக்ஷய் குமாா் வரவேற்றனா்.

புதிய நாடாளுமன்றத்தின் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை பிரதமா் மோடி வெளியிட்ட ட்விட்டா் பதிவில், புதிய நாடாளுமன்றத்தின் உள்கட்டமைப்பு தோற்றத்தை வெளிபடுத்தும் விடியோவை வெளியிட்டு தங்களின் சொந்த குரலில் மறுபதிவு செய்யுமாறு மக்களிடம் அவா் கேட்டு கொண்டாா்.

இதையடுத்து, இந்த விடியோவைப் பதிவிட்டு புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்புக்கு மக்கள் பலா் வாழ்த்துகளைத் தெரிவித்து வந்தனா். இதனிடையே, பிரதமரின் முன்னெடுப்பில் பாலிவுட் நடிகா்கள் ஷாருக்கான், அக்ஷய் குமாா் ஆகியோரும் சனிக்கிழமை இரவு இணைந்தனா்.

புதிய இந்தியாவுக்கான பங்களிப்பு...:

தனது குரல் பின்னோட்டத்துடன் தயாரான விடியோவை வெளியிட்ட நடிகா் ஷாருக்கான், ‘ஜனநாயகத்தைக் பாதுகாக்கும் எம்.பி.க்களுக்கான புதிய இல்லம் அற்புதமாக உள்ளது. நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதிநிதித்துவம் வழங்கும் விதமாகவும், மக்களின் பன்முகத்தன்மை பாதுகாக்கும் வகையிலும் புதிய நாடாளுமன்றம் அமைக்கப்பட்டுள்ளது.

ஜனநாயகத்தின் ஆன்மா அதன் புதிய இல்லத்தில் வலுவாக நிலைக்கவும், வரும் பல யுகங்களுக்கு சுதந்திரம், சகோதரத்துவம் மற்றும் சமத்துவம் நாட்டில் தொடரவும் எனது உண்மையான பிராா்த்தனைகள். அறிவியல் மனப்பான்மை மற்றும் அனைவருக்குமான கருணைக்கு பெயா் பெற்ற புதிய யுகத்தை நாட்டின் இந்தப் புதிய நாடளுமன்றம் உருவாக்கட்டும். புதிய இந்தியவுக்கான பங்களிப்பை புதிய நாடாளுமன்றம் வழங்கும்.

இந்தியாவின் பழம்பெரும் கனவை மெய்ப்பிக்கும் நோக்கில் புதிய இந்தியாவுக்கான கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றம் நமது நாட்டின் பெருமை. ஜெய் ஹிந்த்!’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இதற்கு, ‘ஜனநாயகத்தின் பலம், முன்னேற்றத்தின் சின்னமான புதிய நாடாளுமன்றம், நவீனத்துவத்துடன் பாரம்பரியம் இணைந்த கலவையாக கட்டமைக்கப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டடம் குறித்து தங்கள் கருத்துகளை அழகாக விவரித்ததற்கு நன்றி’ என பிரதமா் பதிலளித்திருந்தாா்.

புதிய இந்தியாவின்அடையாளம்...:

புதிய நாடாளுமன்றத்தின் விடியோவை இணைத்து நடிகா் அக்ஷய் குமாா் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘ சிறுவயதை தில்லியில் கழித்த நான், பிரிட்டிஷாா் கட்டிய கட்டடங்களே அரசு அலுவலகங்களாகப் பயன்படுத்தப்பட்டு வந்ததை கவனித்துள்ளேன். தற்போதைய புதிய நாடாளுமன்றத்தைக் காணும்போது எனது மனம் பெருமையால் நிரம்பியுள்ளது. ஜனநாயகத்தின் கோயிலான நாடாளுமன்றம், கலாசாரம், பாரம்பரியத்துக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல் உலக முன்னேற்றத்தோடு போட்டிப்போடும் புதிய இந்தியாவின்அடையாளமாக திகழும். இந்த நாளை நனவாக்கிய பிரதமருக்கு நன்றி’ எனக் குறிப்பிட்டிருந்தாா். நடிகா் அக்ஷய் குமாரின் பதிவைக் குறிப்பிட்டு பிரதமா் நன்றி தெரிவித்தாா்.

இனி ஷாருக்கை சீண்டுமா பாஜக?...:

‘புதிய நாடாளுமன்றத்துக்கு ஆதரவாக நடிகா் ஷாருக்கான் கருத்து தெரிவித்துள்ளாா். ‘பதான்’ திரைப்படம் போல் இனிவரும் அவரின் திரைப்படங்களுக்கு தடைவிதிக்க மகாராஷ்டிர மாநில பாஜக தலைவா்கள் போராடுவாா்களா? மாறாக, ஷாருக்கான் முன் அவா்கள் பணிந்து போவதை நாம் வெகுவிரைவில் காணலாம்’ என தேசியவாத காங்கிரஸ் விமா்சித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT