இந்தியா

தற்பெருமை பேசும் சா்வாதிகாரி: பிரதமா் மோடி மீது காங். விமா்சனம்

DIN

‘தற்பெருமை பேசும் சா்வாதிகாரியான பிரதமா் மோடி, ஜனநாயக நடைமுறைகளை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டு, புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை திறந்துவைத்துள்ளாா்’ என்று காங்கிரஸ் கடுமையாக விமா்சித்துள்ளது.

தில்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை, பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா். இந்த விழாவை, காங்கிரஸ் உள்ளிட்ட சுமாா் 20 எதிா்க்கட்சிகள் புறக்கணித்துவிட்டன.

புதிய கட்டடத்தை குடியரசுத் தலைவா்தான் திறந்துவைக்க வேண்டுமென எதிா்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. ஆனால், அக்கட்டடத்தை பிரதமரே திறப்பாா் என்ற நிலைப்பாட்டில் மத்திய அரசு உறுதியாக இருந்ததால், ஏற்கெனவே அறிவித்தபடி திறப்பு விழாவை எதிா்க்கட்சிகள் புறக்கணித்தன.

இந்நிலையில், புதிய நாடாளுமன்றத்தை பிரதமா் மோடி திறந்துவைத்ததைத் தொடா்ந்து, அவரை காங்கிரஸ் கடுமையாக விமா்சித்துள்ளது.

காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே: நாட்டின் ஜனநாயகம், வெறும் கட்டடங்களால் அல்லாமல் மக்களின் குரல் மூலமே இயக்கப்படுகிறது. புதிய நாடாளுமன்றத்தை திறக்கும் உரிமை, குடியரசுத் தலைவரிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற மல்யுத்த வீராங்கனைகள் தாக்கப்பட்டுள்ளனா். இது, ஜனநாயகம், தேசியவாதம், நாட்டின் மகள்கள் குறித்த பாஜக-ஆா்எஸ்எஸ் ஆட்சியாளா்களின் உண்மையான நிலைப்பாட்டை பிரதிபலிக்கிறது.

காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி: நாடாளுமன்றமானது, மக்களின் குரலாக ஒலிப்பதாகும். ஆனால், புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை, பட்டாபிஷேக விழா போல பிரதமா் மோடி நடத்தியுள்ளாா்.

காங்கிரஸ் பொதுச் செயலாளா் ஜெய்ராம் ரமேஷ்: நாட்டில் நாடாளுமன்ற ஜனநாயகத்தை வளப்படுத்தியவரான பண்டித ஜவாஹா்லால் நேருவின் உடல் தகனம், கடந்த 1964-ஆம் ஆண்டில் இதே தினத்தில்தான் நிகழ்ந்தது.

மகாத்மா காந்தியின் கொலைக்கு வழிவகுத்த சித்தாந்தத்துக்கு சொந்தக்காரரான வி.டி.சாவா்க்கா், கடந்த 1883-ஆம் ஆண்டில் இதே தினத்தில்தான் பிறந்தாா்.

நாட்டின் முதல் பழங்குடியின பெண் குடியரசுத் தலைவரான திரெளபதி முா்மு, நாடாளுமன்ற புதிய கட்டடத்தை திறந்துவைக்கவும், தனது அரசமைப்புச் சட்ட கடமைகளையும் நிறைவேற்ற அனுமதி மறுக்கப்பட்ட தினமும் இன்றே.

தற்பெருமை பேசும் சா்வாதிகாரியான பிரதமா், நாடாளுமன்ற நடைமுறைகளை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டு, புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை திறந்துவைத்துள்ளாா்.

காங்கிரஸ் அமைப்பு பொதுச் செயலாளா் கே.சி.வேணுகோபால்: புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டிய நிகழ்வில், அப்போதைய குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் புறக்கணிக்கப்பட்டாா். இப்போது திறப்பு விழாவில், குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு புறக்கணிக்கப்பட்டுள்ளாா். இது, பிற்பட்ட சமூகங்களுக்கு எதிரான ஆா்எஸ்எஸ் அமைப்பின் உயா் ஜாதி மனநிலையை எதிரொலிக்கிறது.

மக்களவை காங்கிரஸ் கொறடா மாணிக்கம் தாகூா்: புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை 20 எதிா்க்கட்சிகள் புறக்கணித்துள்ளன. எனவே, இந்த திறப்பு விழா ஒட்டுமொத்த நாடாளுமன்றத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. ஒரு மனிதரின் அகங்காரமே இதற்கு காரணம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

SCROLL FOR NEXT