இந்தியா

வாகனங்களின் டயர்கள் வெடிப்பதை தவிர்க்க முடியுமா?

29th May 2023 01:21 PM

ADVERTISEMENT


நாட்டில் நிகழும் பல சாலை விபத்துகளுக்கு, அதிக வேகம் முதல் காரணமாக இருக்கும்பட்சத்தில், டயர் வெடிப்பு முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது.

வாகன ஓட்டிகள், சாலைகளின் நிலைகளை அறிந்து, அதிக வேகத்தை கட்டுப்படுத்தினால் நிச்சயம் பல சாலை விபத்துகளைத் தவிர்க்க முடியும். அதேவேளையில், டயர் வெடிப்புகளால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க முடியுமா?

ஒரு சில விஷயங்களை வாகன ஓட்டிகள் கவனித்து வந்தால், நிச்சயம் டயர் வெடிப்புகளைத் தவிர்க்கலாம் என்கிறார்கள் வாகனப் பராமரிப்பில் ஈடுபடும் சேவை நிறுவனங்கள்.

சில விஷயங்களை கவனித்து வந்தாலே, டயர்கள் வெடிப்பதைத் தவிர்க்கலாம் என்கிறார்கள்.

ADVERTISEMENT

டயர்களில் சரியான அளவில் காற்றின் அழுத்தம் அளிக்கப்படவேண்டும். காற்றின் அழுத்தம் குறைவாக இருக்கும்போது, டயர்களின் பக்கச் சுவர்கள் நெகிழும் தன்மையை அடைகின்றன. இதனால், வாகனத்தின் அழுத்தத்தை தாங்கும் சக்தியை டயர்கள் இழந்து சில வேளைகளில் வெடிக்கின்றன.

எனவே, டயர்களில் போதுமான காற்று சரியான அழுத்தத்தில் நிரப்பப்பட்டிருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

அதாவது, சேதமடைந்த டயர்கள், டயர்களின் பக்கவாட்டுப் பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் கீறல்கள், சில இடங்களில் வீங்கியதுபோல இருக்கும் டயர்கள், பயன்படுத்துவதற்கு ஏற்புடையது அல்ல.

ஒருவேளை, இதுபோன்ற டயர்களை வைத்துக் கொண்டு, வாகனங்களை வேகமாக இயக்கும்போது, டயர்கள் வெடிக்கும் ஆபத்து அதிகம்.

அதிகம் தேய்ந்த டயர்களும், வரிகள் மறைந்துபோன டயர்களுக்கும் இதே நிலைதான். டயர்கள் தேய்ந்துவிட்டால் உடனடியாக மாற்றுவது சாலச்சிறந்தது.

பொதுவாக வாகனங்களை அதி வேகத்தில் இயக்கும் போதுதான் டயர் வெடிப்புகள் நேரிடுகின்றன. ஒவ்வொரு டயருக்கும் ஒரு வேக விகிதம் இருக்கும். அந்த வேகத்தைத் தாண்டி வாகனங்களை இயக்கும் போது பிரச்னை ஏற்படுகிறது. குறைந்த திறன் கொண்ட டயர்களைக் கொண்ட வாகனத்தை அதிவேகத்தில் இயக்கும் போது அங்கு டயர்களில் அதிக வெப்பம் உருவாகி, வெடிக்கும் அபாயம் உண்டாகிறது.

இது மிகவும் குறிப்பிடத்தக்க விஷயம்.. அதிக எடை. தேய்மானம் கொண்ட டயர்களுடன், அதிக எடையை ஒரு வாகனத்தில் ஏற்றும்போது, டயர்களின் தாங்கும் திறன் அதிகரித்து, அது ஓரிடத்தில் முடியாமல் போகும்போது வெடிக்கிறது.

பொதுவாக தார் சாலைகளை விட, சிமெண்ட் சாலைகள், டயர்களை அதிகம் சூடாக்குகின்றன. எனவே, காங்கிரீட் சாலைகளை பார்த்ததுமே வாகன ஓட்டிகள் வேகத்தைக் குறைத்துவிடுவது நல்லது. 

ஒரு டயரின் சரியான ஆயுள்காலம் என்பது ஆறு ஆண்டுகள். எனவே, வாகனம் வாங்கி ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அல்லது அதற்குரிய தொலைவைக் கடந்ததும் டயர்களை மாற்றிவிடுவது நல்லது. 

வாகனத்தை அதிவேகமாக இயக்குவது மற்றும் அதிக பாரத்தை ஏற்றுவதைத் தவிர்க்கலாம்.

குறைந்த பணத்தில் கிடைக்கிறது என்பதற்காக தரம் குறைந்த டயர்களை வாங்க வேண்டாம். பிஐஎஸ் குறியீடு கொண்ட டயர்களை, உங்களது பயன்பாட்டுக்கு ஏற்ற வகையிலானதை சரியாக தேர்வு செய்து வாங்குங்கள்.

ஒருவேளை தேய்மானம் கொண்ட டயர்களைக் கொண்ட வாகனங்களை இயக்கும் போது எப்போதும் சாலையின் இடதுபக்கமாகவே இயக்குங்கள். ஒருவேளை டயர் வெடித்துவிட்டாலும் வாகனத்தை திசைதிருப்ப உங்களுக்கு போதுமான இடைவெளி கிடைக்கலாம்.

நெடுஞ்சாலைகளில் அதிவேகத்தில் சென்று கொண்டிருக்கும்போது, நடுநடுவே பிரேக்குகளைப் பிடித்து உங்கள் டயர்கள், அதிக வெப்பமாவதிலிருந்து காக்கலாம். ஆனால், அதிவேகத்தில் செல்லும்போது, மிக அழுத்தமான பிரேக்குகளைப் பிடித்து வெடிக்காத டயர்களையும் வெடிக்கவைத்துவிடாதீர்கள்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT