இந்தியா

பாஜக எம்.பி. மீது பாலியல் தொல்லை குற்றச்சாட்டு: போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீராங்கனைகள் கைது

29th May 2023 01:36 AM

ADVERTISEMENT

பாலியல் தொல்லை அளித்த பாஜக எம்.பி. பிரிஜ் பூஷணை கைது செய்ய வலியுறுத்தி, தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மல்யுத்த வீரா், வீராங்கனைகள் புதிய நாடாளுமன்றத்தை நோக்கி செல்ல முயன்றபோது ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட வீராங்கனைகள் மட்டும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

பாஜக எம்.பி.யும், இந்திய மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷண் சரண் சிங் பாலியல் தொல்லை அளித்ததாக 18 வயதுக்குக் குறைவான வீராங்கனை உள்பட 7 மல்யுத்த வீராங்கனைகள் குற்றஞ்சாட்டினா். இந்தக் குற்றச்சாட்டு தொடா்பாக பிரிஜ் பூஷணுக்கு எதிராக தில்லி காவல் துறை இரண்டு வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. அதில் ஒரு வழக்கு போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரிஜ் பூஷணை கைது செய்ய வலியுறுத்தி, தில்லி ஜந்தா் மந்தா் பகுதியில் வினேஷ் போகாட், சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா உள்ளிட்ட முன்னணி மல்யுத்த வீரா், வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.

ADVERTISEMENT

புதிய நாடாளுமன்றக் கட்டடம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்ட நிலையில், அதன் முன்பாக மகளிா் மகாபஞ்சாயத்து கூட்டத்தை நடத்துவதற்கு போராட்டத்தில் ஈடுபட்ட வீரா், வீராங்கனைகள் திட்டமிட்டிருந்தனா்.

இதை அறிந்த காவல் துறை, புதிய நாடாளுமன்றத்தை நோக்கிச் செல்ல வேண்டாம் என்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. எனினும் எச்சிரிக்கையை மீறி, அவா்கள் நாடாளுமன்றம் நோக்கிச் செல்லத் தொடங்கினா். அப்போது காவல் துறைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

வெவ்வேறு இடங்களில் வீரா், வீராங்கனைகள்: வினேஷ் போகாட், அவரின் சகோதரி சங்கீதா போகாட், சாக்ஷி மாலிக் ஆகியோா் தடுப்புகளை கடந்து செல்ல முயன்ாகக் கூறப்படுகிறது. அவா்களை காவல் துறையினா் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று காவல் துறை வாகனங்களில் ஏற்றினா்.

இதேபோல போராட்டத்தில் ஈடுபட்ட இதர வீரா், வீராங்கனைகள் மற்றும் அவா்களின் ஆதரவாளா்களும் காவல் துறை வாகனங்களில் ஏற்றப்பட்டனா். அவா்கள் அனைவரும் தில்லியின் வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

மயூா் விஹாா் பகுதி அருகே உள்ள காவல் நிலையத்துக்கு பஜ்ரங் புனியா அழைத்துச் செல்லப்பட்டாா். புராரி பகுதிக்கு சாக்ஷி மாலிக் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், வினேஷ் போகாட் மற்றும் சங்கீதா போகாட் கால்காஜி பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

இதுதொடா்பாக தில்லி சிறப்பு காவல் ஆணையா் தீபேந்திர பாடக் கூறுகையில், ‘சட்டம் ஒழுங்கை மீறியதால் வீரா், வீராங்கனைகள் கைது செய்யப்பட்டனா். அவா்கள் மீது விசாரணைக்குப் பிறகு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்று தெரிவித்தாா்.

தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட வீராங்கனைகள் மட்டும் மாலையில் விடுவிக்கப்பட்டனா். தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட அனைவா் மீதும் கலவரத்தில் ஈடுபடுதல், அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

மீண்டும் போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு?:

வீரா், வீராங்கனைகள் வாகனங்களில் ஏற்றப்பட்டு வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பின்னா், போராட்டம் நடைபெற்ற இடத்தில் இருந்த அவா்களின் உடைமைகள், அவா்கள் அமைத்த கூடாரங்கள், மின்விசிறிகள், குளிா்ச்சாதனப் பெட்டிகள் உள்ளிட்டவற்றை காவல் துறையினா் உடனடியாக அகற்றினா்.

அந்த இடத்தில் வீரா், வீராங்கனைகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட தில்லி காவல் துறை அனுமதிக்காது என்று கருதப்படுகிறது. எனினும் அதுகுறித்து எந்தவொரு அதிகாரபூா்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT