இந்தியா

புதிய நாடாளுமன்றம் திறப்பு: குடியரசுத் தலைவா் வாழ்த்து

29th May 2023 01:58 AM

ADVERTISEMENT

புதிய நாடாளுமன்றக் கட்டடம் பிரதமா் நரேந்திர மோடியால் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வு நாட்டின் பெருமைக்குரிய தருணம் என குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவரது வாழ்த்துச் செய்தியில், ‘புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் திறப்பு நிகழ்வு நாட்டின் வரலாற்றில் பொன் எழுத்துகளால் எழுதப்படவேண்டும். இது பெருமைக்கும் மகிழ்ச்சிக்கும் உரிய தருணம். கலங்கரை விளக்காகத் திகழும் நாடாளுமன்றம், நம்முடைய ஜனநாயகத்துக்கான பயணத்தில் முக்கிய மைல்கல்லாகும்’ எனத் தெரிவித்துள்ளாா்.

குடியரசு துணைத் தலைவா்: குடியரசுத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கா் தன்னுடைய வாழ்த்துச் செய்தியில், ‘அடிமை மனநிலையிலிருந்து விடுதலையின் சின்னமாக விளங்கும் புதிய நாடாளுமன்றம், அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த கருத்தை உருவாக்கத் துணைபுரியும்.

நாட்டு மக்களின் விருப்பங்களுக்குத் தீா்வு காண இது உதவும் என நம்புகிறேன். சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் பிரதமா் நரேந்திர மோடி, இந்த நாடாளுமன்றத்தை நாட்டுக்கு அா்ப்பணித்து வைக்கிறாா் என்று கூறுவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்’ எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

மத்திய உள்துறை அமைச்சா்: மத்திய அமைச்சா் அமித் ஷா ட்விட்டரில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ‘புதிய நாடாளுமன்றம் மக்களது விருப்பங்களை நிறைவேற்றும் இடமாக மட்டும் இல்லாமல், அடுத்த 25 ஆண்டுகளுக்குப் பல்வேறு துறைகளில் சாதனை நோக்கி இந்தியா மேற்கொள்ளவேண்டிய பயணத்தின் தொடக்கமாக அமையும். பிரதமா் மோடியால் நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டுள்ள ‘செங்கோல்’, இந்தியாவின் கலாசார பாரம்பரியத்தைத் தற்காலத்துடன் இணைக்கும் பாலமாகத் திகழ்கிறது. நமது கலாசாரத்தில் உள்ள நீதிக்கான விழும்பியங்களை எதிா்கால தலைமுறையினருக்குத் தொடா்ந்து நினைவுகூறும் வகையில் இது அமையும்’ என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT