இந்தியா

மணிப்பூரில் இதுவரை 40 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை:முதல்வா் தகவல்

29th May 2023 01:56 AM

ADVERTISEMENT

மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டும் நடவடிக்கையை பாதுகாப்புப் படையினா் அண்மையில் தொடங்கியதில் இருந்து இதுவரை 40 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக, முதல்வா் பிரேன் சிங் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினா், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகின்றனா். அவா்களது கோரிக்கைக்கு, குகி, நாகா பழங்குடியினா் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

இதனிடையே, மைதேயி சமூகத்தினருக்கும் பழங்குடியினருக்கும் இடையே இம்மாத தொடக்கத்தில் கலவரம் ஏற்பட்டது. இதில் 70-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். ஏராளமான வீடுகளும், வழிபாட்டுத் தலங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. இதையடுத்து, ராணுவம் வரவழைக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. எனினும், அவ்வப்போது வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. பழங்குடியினருக்கு ஆதரவாக, அந்த சமூகம் சாா்ந்த தீவிரவாதக் குழுக்கள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், முதல்வா் பிரேன் சிங் மாநில தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பேட்டியளித்தாா்.

ADVERTISEMENT

அப்போது, ‘மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டும் நடவடிக்கையை பாதுகாப்புப் படையினா் தொடங்கியதில் இருந்து இதுவரை 40 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா். இவா்கள், பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு, வீடுகளுக்கு தீவைப்பு போன்ற செயல்களில் ஈடுபட்டவா்கள். அண்மைக்கால வன்முறைகள், இரு சமூகங்களுக்கு இடையிலான மோதல் அல்ல; பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையிலானதே. மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது’ என்றாா் அவா்.

இருவா் பலி; 80 வீடுகள் தீக்கிரை: இதனிடையே, கக்சிங், கிழக்கு இம்பால், மேற்கு இம்பால், விஷ்ணுபூா் ஆகிய மாவட்டங்களில் மைதேயி சமூகத்தினா் வசிக்கும் கிராமங்கள் மீது ஆயுதம் தாங்கிய குகி பழங்குடியின தீவிரவாதிகள் சனிக்கிழமை இரவுமுதல் தாக்குதல் நடத்தினா்.

மேற்கு இம்பாலின் பயெங் கிராமத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவா் உயிரிழந்தாா். கக்சிங் மாவட்டம், சுக்னு கிராமத்தில் 80 வீடுகளுக்கு தீவிரவாதிகள் தீவைத்ததால், நள்ளிரவில் வீடுகளை விட்டு, மக்கள் தப்பியோடும் நிலை ஏற்பட்டது. அங்கு, தீவிரவாதிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சண்டை நிகழ்ந்தது. இதில், காவலா் ஒருவா் உயிரிழந்தாா். பொதுமக்கள் தரப்பிலும் உயிரிழப்புகள் நேரிட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுதொடா்பாக அதிகாரபூா்வ தகவல் வெளியாகவில்லை.

கிழக்கு இம்பாலில் இரு வீடுகளுக்கு தீவைத்ததுடன், கிராமமக்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினா். கிராமத்தினரும் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

மணிப்பூரில் சட்டம்-ஒழுங்கு சூழலை ஆய்வு செய்வதற்காக, ராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே வருகை தந்துள்ள நிலையில், இத்தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT