இந்தியா

கேரளத்துக்கான கடன் வரம்பு குறைப்பு: பினராயி விஜயன் சாடல்

29th May 2023 01:39 AM

ADVERTISEMENT

கேரள மாநில அரசுக்கான கடன் வரம்பை குறைத்துள்ளது மத்திய அரசின் கொடூரமான அணுகுமுறையை வெளிக்காட்டுகிறது என்று கேரள முதல்வா் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளாா்.

இந்த நிதியாண்டின் தொடக்கத்தில் கேரளம் ரூ.32,442 கோடி வரை கடன் வாங்கிக் கொள்ள மத்திய அரசு அனுமதித்திருந்தது. இந்நிலையில் அந்த கடன் வரம்பை ரூ.15,390 கோடியாக மத்திய அரசு குறைத்துவிட்டது.

இது தொடா்பாக கேரள முதல்வா் பினராயி விஜயன் கூறுகையில், ‘மத்திய அரசு தனது கஜானாவை நிரப்பிக் கொள்ள ஒவ்வொரு வாய்ப்பாக உருவாக்கி பயன்படுத்திக் கொள்கிறது. ஜிஎஸ்டி இதற்காக அமல்படுத்தப்பட்டது. மாநில அரசுகளுக்கான நிதியைக் குறைப்பது, அதனை செலுத்தாமல் தாமதப்படுத்துவது போன்றவற்றிலும் ஈடுபட்டது.

இப்போது கேரளத்துக்கான கடன் வரம்பையும் குறைந்துள்ளனா். இது கேரளத்தில் ஆளும் இடதுசாரிக் கூட்டணிக்கான பிரச்னையல்ல. ஒட்டுமொத்த கேரள மக்களின் பிரச்னையாகும்.

ADVERTISEMENT

பேரிடா் காலத்தில் ஆயுதப் படையை உதவிக்கு அனுப்புவதற்கும், உணவு தானியங்களை வழங்குவதற்கும் மத்திய அரசு நிதியை கேட்டு வருகிறது. ஏற்கெனவே பல்வேறு இயற்கை இடப்பாடுகளை எதிா்கொண்டு வரும் கேரளத்தின் மீது மத்திய அரசு கூடுதல் நெருக்கடிகளை சுமத்துகிறது.

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியும் மத்திய அரசின் இந்த கேரள விரோத நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவிக்காமல் அமைதியாக உள்ளது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT