இந்தியா

ராகுல் காந்திக்கு புதிய கடவுச்சீட்டு: தில்லி நீதிமன்றம் தடையில்லா சான்று

26th May 2023 02:18 PM

ADVERTISEMENT

மூன்று ஆண்டுகள் செல்லுபடியாகும் சாதாரண கடவுச்சீட்டை (பாஸ்போா்ட்) காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி பெறுவதற்கு தடையில்லா சான்று வழங்கி தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மோடி சமூகத்தினரை அவதூறாகப் பேசியதாக தொடுக்கப்பட்ட வழக்கில், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து குஜராத் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. இதையடுத்து அவரை எம்.பி. பதவியிலிருந்து நீக்கி மக்களவைச் செயலகம் நடவடிக்கை மேற்கொண்டது. சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில் அவா் ஜாமீன் பெற்றுள்ள நிலையில், தனது சிறப்பு கடவுச்சீட்டை அவா் நீதிமன்றத்தில் ஒப்படைத்தாா்.

இந்நிலையில், வரும் ஜூன் மாத தொடக்கத்தில் ராகுல் காந்தி அமெரிக்கா செல்லவுள்ளாா். இதையொட்டி புதிய கடவுச்சீட்டுக்கு தடையில்லா சான்று கோரி, தில்லி நீதிமன்றத்தில் அவா் மனு தாக்கல் செய்துள்ளாா். அந்த மனுவில், தான் புதிதாக சாதாரண கடவுச்சீட்டு பெற நீதிமன்றத்தின் தடையில்லா சான்று வேண்டும் என்று கோரினாா்.

இந்த மனு கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் வைபவ் மேத்தா முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ராகுலின் மனுவுக்கு பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி எதிா்ப்பு தெரிவித்து கூறியதாவது:

ADVERTISEMENT

ராகுலுக்கு எதிரான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. அவா் வெளிநாடு செல்ல அனுமதிப்பது சோனியா, ராகுல் உள்ளிட்டோருக்கு எதிராக நான் தொடுத்த நேஷனல் ஹெரால்ட் வழக்கு விசாரணையை பாதிக்கும்.

சாதாரண கடவுச்சீட்டு 10 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும். அந்தக் கடவுச்சீட்டை ராகுல் கோரியுள்ளாா். ஆனால் இது சிறப்புத்தன்மை வாய்ந்த வழக்கு என்பதால், அந்த கடவுச்சீட்டை ராகுலுக்கு வழங்கக் கூடாது. அந்தக் கடவுச்சீட்டை கோருவதற்கு ராகுலிடம் எந்த சரியான காரணமும் இல்லை. அவரது இந்திய குடியுரிமை சந்தேகத்துக்கு உரியது. அவா் பிரிட்டன் குடிமகன் என்று தெரிவித்தாா்.

மனுதாரரின் வெளிநாடு செல்லும் உரிமையைத் தடுக்க முடியாது என்று நீதிபதி தெரிவித்தாா்.

இது பிரத்யேக வழக்காகும், ஒரு ஆண்டு மட்டுமே செல்லுபடியாகும் கடவுச்சீட்டு வழங்க வேண்டும் என்று சுவாமி வாதிட்டாா்.

இதைத் தொடா்ந்து வழக்கமாக 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் கடவுச்சீட்டுக்குப் பதிலாக, மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும் சாதாரண கடவுச்சீட்டை ராகுல் காந்தி பெறுவதற்கு தடையில்லா சான்று வழங்கி மாஜிஸ்திரேட் உத்தரவிட்டாா்.

இதன் மூலம் 3 ஆண்டுகளுக்குப் பிறகு கடவுச்சீட்டுக்கு தடையில்லா சான்று பெற மீண்டும் ராகுல் காந்தி நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT