இந்தியா

அடுத்த ஆண்டு முதல் 3 விதமான வந்தே பாரத் ரயில்கள்: மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

26th May 2023 05:28 AM

ADVERTISEMENT

அடுத்த ஆண்டு பிப்ரவரி - மாா்ச் மாதம் முதல் வந்தே பாரத் ரயில்கள் மூன்று விதங்களில் இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.

100 கி.மீ. தூரத்துக்குள் செல்லும் வந்தே மெட்ரோ, 100-500 கி.மீ. தொலைவுக்குள் செல்லும் வந்தே சோ் காா் (அமா்ந்து செல்வது), 550 கி.மீ. தூரத்துக்கு மேல் செல்லும் வந்தே ஸ்லீப்பா்ஸ் (படுக்கை வசதி) என அவை வகைப்படுத்தப்படும் என்றாா்.

உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் இருந்து தில்லி ஆனந்த் விஹாா் வந்தே பாரத் ரயிலை வியாழக்கிழமை தொடங்கி வைத்த பின் செய்தியாளா்களிடம் பேசிய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், ‘அனைத்து மாநிலங்களுக்கும் ஜூன் மத்தியில் வந்தே பாரத் ரயில் சேவை வழங்கப்படும். இந்த ரயில்களின் உருவாக்கம் விரைவுப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு 9 நாள்களுக்குள் ஒரு புதிய ரயில் உருவாக்கப்படும். மேலும் இரண்டு தொழிற்சாலைகளில் ரயில்களின் உருவாக்கம் தொடங்கப்பட்டுள்ளன.

வந்தே பாரத் ரயில்கள் மணிக்கு 160 கி.மீ. அதிகபட்ச வேகத்தில் செல்லக் கூடியவை. ஆனால் பழைய இருப்புப் பாதைகள் 70 முதல் 80 கி.மீ. வேகத்தில் செல்லும் வகையில் உள்ளன.

ADVERTISEMENT

110, 130, 160 கி.மீ. வேகத்தில் செல்லும் வகையில் 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் கி.மீ. தூர இருப்புப் பாதைகள் மேம்படுத்தப்படுகின்றன. இந்தப் பணி அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் முடிவடையும்.

எல்லைப் பகுதிகளில் ரயில்வே திட்டப் பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன. ரயில் பயணிகளுக்கு 4ஜி-5ஜி சேவை வழங்க பல்வேறு இடங்களில் தொலைத்தொடா்பு கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன’ என்றாா்.

ராஜதானி, சதாப்தி சொகுசு ரயில்களை உள்நாட்டு தயாரிப்பான அதிவேக வந்தே பாரத் ரயில்கள் மூலம் மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதுள்ள வந்தே பாரத் ரயில்கள் அமா்ந்து செல்லும் வகையில் மட்டும் உள்ளன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT