இந்தியா

மெரீனாவில் பேனா சின்னம் அமைக்க எதிர்ப்பு: உச்சநீதிமன்றத்தில்  மேலும் ஒரு மனு

24th May 2023 02:32 AM

ADVERTISEMENT

சென்னை மெரீனா கடல் பகுதியில் தமிழக முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் நினைவாக பேனா சின்னம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மேலும் ஒரு மனு செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
 தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த மு.கருணாநிதிக்கு சென்னை மெரீனா கடற்கரை பகுதி கடலில் 134 அடி உயர பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதை எதிர்த்து ஏற்கெனவே ராமநாதபுரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த நல்லதம்பி உள்ளிட்ட 8 மீனவர்கள், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்தச் சூழலில், மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் இந்த பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு எதிராக ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தெரிவித்திருப்பதாவது:
 மெரீனா கடல் பகுதியில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னத்தை அமைக்க திட்டமிட்டு இருப்பது, கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளுக்கு எதிராக உள்ளது.
 சம்பந்தப்பட்ட அனைத்து மத்திய, மாநில அரசுகள் உள்ளடங்கிய எதிர்மனுதாரர்களுக்கு கடல் அளவு உயர்வதையும், அரிப்பையும் தடுக்கும் வகையில் உத்தரவிட வேண்டும். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கடலோர பிராந்தியங்களில் எவ்வித கட்டுமானப் பணியும் மேற்கொள்வதைத் தடுக்க உத்தரவிட வேண்டும்.
 அனைத்து மாநிலங்களின் கடலோரங்களில் எவ்வித உடல்களையும் அடக்கம் செய்வதையும் தடுக்க வேண்டும். மெரீனா கடற்கரையின் உள்பகுதியில் 134 அடி உயர பேனா சின்னம் அமைக்கும் தமிழக அரசின் முடிவையும் ரத்து செய்ய வேண்டும். இயற்கை நீதியின் அடிப்படை கொள்கைகளை பின்பற்றமால் தமிழக அரசு இந்த பேனா சிலை அமைக்கும் நடவடிக்கை எடுத்துள்ளது என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT