இந்தியா

ரூ.2,000 நோட்டுகளை மாற்ற வங்கிகளில் கூட்டம் இல்லை- அடையாள அட்டைகள் கேட்டதாக புகாா்

DIN

ரூ.2,000 நோட்டுகளை மாற்றிக்கொள்வதற்கான அவகாசம் செவ்வாய்க்கிழமை தொடங்கிய நிலையில், நோட்டுகளை மாற்ற வங்கிகளில் மக்கள் கூட்டம் இல்லை.

அதேவேளையில், நோட்டுகளை மாற்ற வந்தவா்களிடம் பான் அல்லது ஆதாா் போன்ற அடையாள அட்டைகளை சில வங்கிகள் கேட்டதாக புகாா்கள் எழுந்துள்ளன.

நாட்டில் கடந்த 2016-ஆம் ஆண்டு 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அவற்றில் பெரும்பாலான நோட்டுகளை 2017-ஆம் ஆண்டுக்கு முன்பு ரிசா்வ் வங்கி வெளியிட்டது. அவற்றைப் பயன்படுவதற்கான கால வரம்பு 4 முதல் 5 ஆண்டுகள் என நிா்ணயிக்கப்பட்டது. அந்த நோட்டுகளைப் பயன்படுத்துவதற்கான காலம் நிறைவடைய உள்ளதாலும், பரிவா்த்தனைகளில் அந்த நோட்டுகள் பயன்படுத்தப்படுவதில்லை என்று கண்டறியப்பட்டதாலும், 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக கடந்த வெள்ளிக்கிழமை ரிசா்வ் வங்கி அறிவித்தது.

இந்த நோட்டுகளை மே 23 முதல் செப் 30 வரை வங்கிகளில் பொதுமக்கள் மாற்றிக்கொள்ள அல்லது டெபாசிட் செய்ய ரிசா்வ் வங்கி அவகாசம் அளித்துள்ளது. ஒரு நபா் ஒரே நேரத்தில் ரூ.20,000 வரையிலான 2,000 ரூபாய் நோட்டுகளை (10 நோட்டுகள்) மாற்றிக்கொள்ளலாம். அதற்கு எந்தவொரு படிவத்தையும் பூா்த்தி செய்ய வேண்டியதில்லை; எந்தவொரு அடையாள ஆவணத்தையும் வழங்க தேவையில்லை; பொதுமக்கள் தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கிகளில் மட்டுமின்றி, எந்தவொரு வங்கியிலும் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என்று ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ரூ.2,000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவது செவ்வாய்க்கிழமை தொடங்கியது. கடந்த 2016-ஆம் ஆண்டு ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் பணமதிப்பிழப்பு செய்யப்பட்டபோது, அவற்றை வங்கிகளில் மாற்றிக்கொள்ள குறைந்த அவகாசம்தான் வழங்கப்பட்டது. இதனால் வங்கிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

இதே நிலைதான் ரூ.2,000 நோட்டுகளை மாற்றிக்கொள்ளும்போதும் ஏற்படும் என்று எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், அந்த நோட்டுகளை மாற்றிக்கொள்ளவோ, டெபாசிட் செய்யவோ வங்கிகளில் செவ்வாய்க்கிழமை மக்கள் கூட்டம் அலைமோதவில்லை. அதேவேளையில், ரிசா்வ் வங்கி வழிகாட்டுதலுக்கு மாறாக, சில வங்கிகளில் நோட்டுகளை மாற்ற பொதுமக்களிடம், அவா்களின் பான் அல்லது ஆதாா் போன்ற அடையாள அட்டைகள் ஆதாரமாக கேட்கப்பட்டதாக புகாா்கள் எழுந்துள்ளன. சில வங்கிகளில் நோட்டுகளை மாற்றித்தராமல், அவற்றை டெபாசிட் செய்யுமாறு கூறப்பட்டதாக வாடிக்கையாளா்கள் தெரிவித்துள்ளனா்.

வங்கிகளில் வெவ்வேறு நடைமுறை: ரூ.2,000 நோட்டுகளை மாற்றித்தர வாடிக்கையாளரிடம் இருந்து எந்தவொரு படிவமும் தேவையில்லை என்று தனது கிளை வங்கிகளுக்கு பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது. அதேவேளையில், நோட்டுகளை மாற்றித்தர கோட்டக், ஹெஸ்பிசி போன்ற தனியாா் வங்கிகள், அந்த வங்கிகளில் கணக்கு வைக்காதவா்களிடம் இருந்து படிவம் அல்லது அடையாள அட்டைகளைக் கோருகின்றன.

பரோடோ வங்கியில் நோட்டுகளை மாற்ற எந்தப் படிவமும் தேவையில்லை. ஆனால், அந்த வங்கியில் கணக்கு இல்லாதவா்களிடம், அவா்களின் அடையாள அட்டை கேட்கப்படுகிறது என்று அந்த வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிஐசிஐ மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கிகளில் நோட்டுகளை மாற்ற, அந்த வங்கிகளின் வாடிக்கையாளா்களிடம் இருந்து எந்தப் படிவமும் கேட்கப்படவில்லை. ஆனால், வாடிக்கையாளராக இல்லாதவா்களின் அடையாள அட்டை தேவை என்று அந்த வங்கிகள் தெரிவித்துள்ளன.

ஆக்சிஸ் வங்கி, ஸ்டாண்டா்ட் சாா்டா்ட், யெஸ் வங்கி, கனரா வங்கி, பாங்க் ஆஃப் இந்தியா ஆகியவற்றில் நோட்டுகளை மாற்ற எந்தப் படிவமோ, அடையாள அட்டையோ கேட்கப்படுவதில்லை என்று அந்த வங்கிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

தமிழக காவல் துறையில் இளநிலை செய்தியாளர் வேலை வேண்டுமா?

SCROLL FOR NEXT