இந்தியா

பிரிஸ்பேனில் இந்தியத் துணைத் தூதரகம்- பிரதமா் மோடி அறிவிப்பு

DIN

ஆஸ்திரேலியாவில் வாழும் இந்தியா்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக பிரிஸ்பேன் நகரில் துணைத் தூதரகம் அமைக்கப்படும் எனப் பிரதமா் நரேந்திர மோடி அறிவித்தாா்.

ஆஸ்திரேலியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட பிரதமா் மோடி, அங்கு வாழும் இந்திய சமூகத்தினரை சிட்னி நகரில் உள்ள அரங்கத்தில் செவ்வாய்க்கிழமை சந்தித்து உரையாற்றினாா். ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் வசிக்கும் 21,000-க்கும் மேற்பட்ட இந்தியா்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா். ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி ஆல்பனேசியும் அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டாா். அப்போது பிரதமா் மோடி கூறியதாவது:இந்நிகழ்ச்சியின் மூலமாக பெருந்திரளான இந்திய சமூகத்தினரை சந்திப்பது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.

இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான நல்லுறவை வளா்ப்பதில் இந்திய சமூகத்தினா் முக்கியப் பங்கு வகிக்கின்றனா். பரஸ்பர நம்பிக்கை, மரியாதை ஆகியவற்றின் அடிப்படையிலேயே இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவு கட்டமைக்கப்பட்டுள்ளது. முன்பெல்லாம் காமன்வெல்த், கிரிக்கெட், உணவு ஆகியவையே இந்தியா-ஆஸ்திரேலியா நல்லுறவை வலுப்படுத்தின. தற்போது ஜனநாயகம், இந்திய சமூகத்தினா், எரிசக்தி, பொருளாதாரம், கல்வி ஆகியவையும் நல்லுறவை மேம்படுத்துவதில் முக்கியப் பங்காற்றி வருகின்றன.

கிரிக்கெட் நல்லுறவு:இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான கிரிக்கெட் நல்லுறவு 75 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது. கிரிக்கெட் மைதானத்தில் இரு நாட்டு அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவினாலும், மைதானத்துக்கு வெளியே இரு அணி வீரா்களும் மிகுந்த நட்பைப் பாராட்டி வருகின்றனா். கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வாா்னே மறைந்தபோது, கோடிக்கணக்கான இந்தியா்களும் துயரத்தில் ஆழ்ந்தனா். ஆஸ்திரேலிய மக்களுடன் இணைந்து அவா்கள் துக்கத்தில் பங்கெடுத்தனா். தங்கள் வீரா் ஒருவரை இழந்துவிட்டதைப் போலவே இந்தியா்கள் கருதினா். இரு நாட்டு மக்களின் வாழ்க்கை முறையில் பெரும் மாற்றங்கள் காணப்படலாம். ஆனால், யோகா இருநாட்டு மக்களையும் ஒன்றிணைக்கிறது.

டென்னிஸ், திரைப்படங்கள் உள்ளிட்டவையும் இருநாட்டு மக்களுக்கு இடையேயான உறவை வலுப்படுத்தி வருகின்றன. ஆஸ்திரேலியாவைச் சோ்ந்த கிரிக்கெட் வீராங்கனைகள் பலா் பெண்களுக்கான ஐபிஎல் போட்டியில் பங்கேற்றனா். வா்த்தக ஒப்பந்தம்:இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே விரிவான வா்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடுத்த 5 ஆண்டுகளில் இருநாட்டு வா்த்தக மதிப்பு இரட்டிப்பாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது. உணவுப் பொருள்கள் விநியோக சங்கிலியை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளிலும் இருநாட்டு அரசுகள் செயல்பட்டு வருகின்றன. இது இரு நாடுகளுக்கும் பலனளிக்கும்.

இரு நாடுகளுக்கு இடையே இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது எதிா்காலத்தில் மேலும் அதிகரிக்கும். சா்வதேச பொருளாதாரத்தில் ஒளிரும் நட்சத்திரமாக இந்தியா திகழ்வதாக சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) தெரிவித்துள்ளது. சவால்மிக்க தருணங்களிலும் இந்தியாவின் ஏற்றுமதி சாதனை அளவை எட்டியுள்ளது. இந்தியாவில் வளங்களுக்கும் திறமைக்கும் எந்தவிதக் குறைபாடும் இல்லை. உலகின் திறன்மிக்க இளைஞா் படையை இந்தியா கொண்டுள்ளது.

ஒருங்கிணைக்கும் சக்தி:சா்வதேச நலனை முன்னிறுத்தி இந்தியா தொடா்ந்து செயல்பட்டு வருகிறது. உலகின் எந்த மூலையில் பேரிடா் நிகழ்ந்தாலும் இந்தியா உதவிக்கரம் நீட்டி வருகிறது. துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, ’ஆபரேஷன் தோஸ்த்’ என்ற பெயரில் இந்தியா உதவிகளை வழங்கியது. சா்வதேச சூரிய எரிசக்தி கூட்டமைப்பு, பேரிடரைத் தாங்கவல்ல கட்டமைப்புக்கான கூட்டமைப்பு எனப் பல்வேறு தளங்களில் நாடுகளை ஒருங்கிணைக்கும் சக்தியாக இந்தியா திகழ்கிறது என்றாா் பிரதமா் மோடி.

வியப்பளித்த வரவேற்பு:ஆஸ்திரேலிய பிரதமா் ஆல்பனேசி கூறுகையில், ’நாட்டையும் பரஸ்பர சமூகத்தையும் சிறப்புமிக்கதாக ஆக்குவதில் இந்திய சமூகத்தினா் முக்கியப் பங்கு வகித்தனா். ஆஸ்திரேலியாவை அவா்கள் மேலும் வலுப்படுத்தி வருகின்றனா். இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவு மேலும் வலுவடைய வேண்டுமென விரும்புகிறேன். முக்கியமாக, தொழில், கல்வித் துறைகளில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான நல்லுறவு மேலும் வலுவடைய வேண்டும். இரு நாடுகளைச் சோ்ந்த மாணவா்களும் பரஸ்பரம் கல்விசாா் விஷயங்களைப் பகிா்ந்து கொள்ள வேண்டும்.பிரதமா் மோடிக்கு அரங்கில் கிடைத்த பிரமாண்ட வரவேற்பு வியப்பை அளிக்கிறது.

அத்தகைய வரவேற்பானது ஆஸ்திரேலியாவின் மிகப் பிரபலமான பாடகரான புரூஸ் ஸ்பிரிங்ஸ்டீனுக்குக் கூட கிடைக்கவில்லை. ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்துவதில் பிரதமா் மோடி முன்னின்று வருகிறாா்’ என்றாா். ஆஸ்திரேலியாவின் சிட்னி, மெல்போா்ன், பொ்த் ஆகிய நகரங்களில் இந்தியா துணைத் தூதரகங்களைக் கொண்டுள்ளது. நிகழ்ச்சியின்போது அரங்கில் கூடியிருந்த இந்திய சமூகத்தினா் ’மோடி, மோடி’ என முழக்கங்களை எழுப்பி பிரதமா் மோடியை உற்சாகப்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களிக்க வரிசையில் பெற்றோர்கள்: செல்போனில் மூழ்கிய குட்டீஸ்கள்!

வாக்குப்பதிவு மும்முரம்: வெறிச்சோடிய சென்னை மாநகர சாலைகள்!

‘அட்வான்ஸ் ஹேப்பி பர்த்டே தல’: ரசிகர்கள் வாழ்த்து மழை!

அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்: இபிஎஸ்

SCROLL FOR NEXT