மணிப்பூரின் கிழக்கு இம்பால் மாவட்டத்தில் திங்கள்கிழமை திடீரென வன்முறை ஏற்பட்டது. 2 வீடுகளுக்கு தீவைக்கப்பட்டதால், பதற்றமான சூழல் நிலவியது.
மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினா், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகின்றனா். இந்த கோரிக்கைக்கு, நாகா, குகி உள்ளிட்ட பழங்குடியினா் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.
இரு சமூகத்தினருக்கும் இடையே இம்மாத தொடக்கத்தில் கலவரம் வெடித்தது. இதில் 70-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். ஏராளமான வீடுகள், வழிபாட்டுத் தலங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இதையடுத்து, ராணுவம் வரவழைக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில், கிழக்கு இம்பால் மாவட்டத்தில் ஆயுதங்களுடன் சுற்றிய கும்பலினா், 2 வீடுகளுக்கு தீவைத்தனா். மேலும், கடைகளை அடைக்குமாறு மிரட்டியதால், பதற்றம் ஏற்பட்டது.
இதையடுத்து, அங்கு விரைந்த ராணுவத்தினா், கண்ணீா் புகைகுண்டுகளை வீசி, கும்பலை விரட்டியடித்தனா். இந்த நடவடிக்கையின்போது சிலா் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆயுதமேந்திய கும்பலில் இருவா் கைது செய்யப்பட்டனா்.
கிழக்கு இம்பால் மாவட்டத்தில் ஊரடங்கு தளா்த்தப்பட்டிருந்த நிலையில், அது மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.