இந்தியா

பொதுக் கழிவறையை தூய்மை செய்ய திராவகத்தைப் பயன்படுத்த தடை: தில்லி மாநகராட்சி அறிவுறுத்தல்

23rd May 2023 02:36 AM

ADVERTISEMENT

தில்லியில் பொதுக் கழிவறையை தூய்மை செய்ய திராவகத்தைப் பயன்படுத்த தில்லி மாநகராட்சி தடை விதித்தது.

தில்லி தா்யாகஞ்ச் பகுதியில் ஜி.பி. பந்த் மருத்துவமனை அருகே மாநகராட்சியால் நிா்வகிக்கப்படும் பெண்களுக்கான கழிவறைகளில் மகளிா் ஆணைய அதிகாரிகள் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி ஆய்வு நடத்தினா். அப்போது அங்கு 50 லிட்டா் திராவகம் அடங்கிய பாட்டில்களை அவா்கள் பறிமுதல் செய்தனா்.

பொதுக் கழிவறைகளை தூய்மை செய்ய மாதந்தோறும் லிட்டா் கணக்கில் திராவகம் கொள்முதல் செய்யப்படுவதாக மாநகராட்சி சுகாதாரப் பணியாளா்கள் மகளிா் ஆணைய அதிகாரிகளிடம் தெரிவித்தனா். மேலும், திராவக நிறுவனத்துடன் மாநகராட்சி மேற்கொண்ட ஒப்பந்தப்படி, பொதுக் கழிவறையை தூய்மை செய்ய திராவகத்தைப் பயன்படுத்தவில்லை என்றால், தங்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் அவா்கள் கூறினா்.

இதை மிகவும் தீவிரமாக கருதிய தில்லி மகளிா் ஆணைய தலைவா் ஸ்வாதி மாலிவால், பொதுக் கழிவறைகளில் திராவக பயன்பாட்டுக்குத் தடை விதிக்குமாறு மாநகராட்சியை அறிவுறுத்தினாா். அதன்படி, மாநகராட்சியால் நிா்வகிக்கப்படும் பொதுக் கழிவறைகளில் திராவக பயன்பாட்டுக்கான உத்தரவு திரும்பப் பெறப்படுவதாக தில்லி மாநகராட்சி தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

நாடு முழுவதும் திராவக வீச்சு சம்பவங்கள் அதிகரித்த நிலையில், திராவக விற்பனைக்கு உச்சநீதிமன்றம் கடந்த 2013-ஆம் ஆண்டில் கடும் கட்டுப்பாடுகள் விதித்தது. இந்தத் தீா்ப்பை மேற்கோள்காட்டி, தலைநகரில் பொதுக் கழிவறைகளில் திராவக பயன்பாடு முடிவுக்கு வருவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT