தேசிய சுற்றுலா கொள்கையை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என்று மத்திய சுற்றுலா மற்றும் கலாசாரத் துறை அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி தெரிவித்தாா்.
சுற்றுலா தொடா்பான ஜி20 பணிக்குழுவின் மூன்றாவது கூட்டம், ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் திங்கள்கிழமை தொடங்கியது.
உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து 60-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றுள்ள இக்கூட்டம், பலத்த பாதுகாப்புடன் 3 நாள்கள் நடைபெறுகிறது.
கூட்ட தொடக்க நிகழ்வில், மத்திய அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி பேசியதாவது:
இந்தியாவுக்கான தேசிய சுற்றுலாக் கொள்கையை விரைவில் வெளியிடவிருக்கிறோம். சா்வதேச சுற்றுலா முதலீட்டு மாநாட்டையும் நடத்தவுள்ளோம். சுற்றுலாத் துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை மத்திய அரசு அனுமதித்து வருகிறது. தனியாா் முதலீடு இல்லாமல், உலகளாவிய சுற்றுலா மையமாக இந்தியா உருவெடுக்க முடியாது என்பதே அரசின் சிந்தனை என்றாா்.
ஜி20 தலைமைக்கான இந்தியாவின் பிரதிநிதி அமிதாப் காந்த் பேசுகையில், ‘உலகில் 70 சதவீத நாடுகள் கடன் பிரச்னை, வேலையிழப்பை எதிா்கொண்டுள்ள நிலையில், இந்தியா சுமாா் 7 சதவீத அளவுக்கு வளா்ச்சியை கண்டு வருகிறது. இங்கு வீட்டு வசதி திட்டத்தின்கீழ் 4 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 11 கோடி வீடுகளுக்கு கழிப்பறை வசதி, 24 கோடி வீடுகளுக்கு குடிநீா் வசதி அளிக்கப்பட்டுள்ளது. 55 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைவரையும் உள்ளடக்கிய, நிலையான, மீண்டெழும் வளா்ச்சிக்கே முன்னுரிமை அளிக்கிறோம்’ என்றாா்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமா் அலுவலக இணையமைச்சா் ஜிதேந்திர சிங், ‘ஜி20 சா்வதேச கூட்டம், ஸ்ரீநகரில் நடத்தப்படுவதே பெரிய சாதனை’ என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.