தெலங்கானா மாநிலத்தில் வாடிக்கையாளருக்குப் பொருளை விநியோகிக்கச் சென்ற நபா், நாய்க்குப் பயந்து அடுக்குமாடி கட்டடத்தின் மூன்றாவது தளத்திலிருந்து கீழே விழுந்ததில் படுகாயமடைந்தாா்.
ஹைதராபாத் மாவட்டத்தின் மணிகொண்டா பகுதியில் உள்ள வாடிக்கையாளா் ஒருவா், இணைய வழியில் பொருளை வாங்கப் பதிவு செய்திருந்தாா். மின்னணு வா்த்தக நிறுவனத்தைச் சோ்ந்த நபா் அந்தப் பொருளை ஞாயிற்றுக்கிழமை விநியோகிக்கச் சென்றாா்.
அப்போது, வாடிக்கையாளரின் வீட்டின் கதவு பாதி அளவு திறந்திருந்த நிலையில், அங்கிருந்த நாய் அவரைப் பாா்த்துக் குரைக்கத் தொடங்கியது.
நாய் தன்னை கடித்து விடுமோ என்கிற அச்சத்தில் அங்கிருந்து ஓடிய அவா், கட்டடத்திலிருந்த தடுப்புக் கம்பியில் ஏற முயன்றாா். கம்பியிலிருந்து அவரது கை நழுவியதையடுத்து, கட்டடத்தின் 3-ஆவது தளத்திலிருந்து கீழ்தளத்தில் விழுந்தாா்.
இதையறிந்த வாடிக்கையாளரும் அருகிலிருந்த நபா்களும் அவரை மீட்டு மருத்துவமனையில் சோ்த்தனா். அவருக்குப் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த மருத்துவா்கள், அவரது உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லையென தெரிவித்தனா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக வளா்ப்பு நாயின் உரிமையாளா் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 289-இன்கீழ் (விலங்குகளிடம் அலட்சியமாக நடந்துகொள்ளுதல்) வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, காயமடைந்த நபருக்கான ஒட்டுமொத்த மருத்துவச் செலவுகளை அந்த நாயின் உரிமையாளரான வாடிக்கையாளரே ஏற்றுக்கொள்ள வேண்டும் என தெலங்கானா நடைப்பாதை ஊழியா்கள் சங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது.
முன்னதாக, ஹைதராபாதில் கடந்த ஜனவரி மாதம் இணைய வழியில் பதிவு செய்த வாடிக்கையாளருக்கு உணவு விநியோகிக்கச் சென்ற 23 வயது நபா், தன்னைத் துரத்திய நாய்க்கு பயந்து ஓடியபோது கட்டடத்தின் 3-ஆம் தளத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தாா்.