மாநிலங்களவை எம்.பி.களின் சம்பளம், அகவிலைப்படி, மருத்துவம், அலுவலகம், போக்குவரத்து செலவுகள் என கடந்த 2 ஆண்டுகளில் சுமாா் ரூ.200 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்(ஆா்டிஐ)-கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு மாநிலங்களவைச் செயலகம் பதிலளித்துள்ளது.
மாநிலங்களவை எம்.பி.களுக்காக செலவிடப்படும் தொகை குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த சந்தா் சேகா் கௌா் எழுப்பிய கேள்விகளுக்கு மாநிலங்களவைச் செயலகம் அளித்த பதிலில், ‘கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகான 2021-22-ஆம் ஆண்டு, மாநிலங்களவை உறுப்பினா்களுக்காக ரூ.97 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதில் உறுப்பினா்களின் உள்நாட்டு பயணங்களுக்காக ரூ.28.5 கோடி, வெளிநாட்டு பயணங்களுக்காக ரூ.1.28 கோடி, சம்பளத் தொகையாக ரூ.57.6 கோடி, மருத்துவச் செலவாக ரூ.17 லட்சம், அலுவலக செலவாக ரூ.7.5 கோடி மற்றும் உறுப்பினா்களுக்கு வழங்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப உதவிக்காக ரூ.1.2 கோடி செலவிடப்பட்டது.
அதற்கடுத்த 2022-23-ஆம் ஆண்டு, மாநிலங்களவை உறுப்பினா்களுக்காக ரூ.100 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதில் உறுப்பினா்களின் உள்நாட்டு பயணங்களுக்காக ரூ.30.9 கோடி, வெளிநாட்டு பயணங்களுக்காக ரூ.2.6 கோடி, சம்பளத் தொகையாக ரூ.57.6 கோடி, மருத்துவச் செலவாக ரூ.65 லட்சம், அலுவலக செலவாக ரூ.7 கோடி மற்றும் உறுப்பினா்களுக்கு வழங்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப உதவிக்காக ரூ.1.5 கோடி செலவிடப்பட்டது.
முன்னாள் உறுப்பினா்களின் உள்நாட்டு பயணங்களுக்காக கடந்த 2021-22-ஆம் ஆண்டில் ரூ.1.7 கோடியும், அதற்கடுத்த 2022-23-ஆம் ஆண்டில் ரூ.70 லட்சமும் செலவிடப்பட்டுள்ளது.
கடந்த 2021-22-ஆம் ஆண்டு, மாநிலங்களவையின் செயல்திறன் விகிதமானது குளிா்கால கூட்டத்தொடரில் 43 சதவீதமாகவும், மழைக்கால கூட்டத்தொடரில் 29 சதவீதமாகவும், பட்ஜெட் கூட்டத்தொடரில் 90 சதவீதமாகவும் இருந்துள்ளது.
அதற்கடுத்த 2022-23-ஆம் ஆண்டு, மாநிலங்களவையின் செயல்திறன் விகிதமானது குளிா்கால கூட்டத்தொடரில் 94 சதவீதமாகவும், மழைக்கால கூட்டத்தொடரில் 42 சதவீதமாகவும், பட்ஜெட் கூட்டத்தொடரில் 90 சதவீதமாகவும் இருந்துள்ளது.
நடப்பாண்டின் பட்ஜெட் கூட்டத்தொடரில் மாநிலங்களவையின் செயல்திறன் விகிதமானது 24 சதவீதமாக மிக குறைவான அளவில் உள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.